பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா: தேவரின் தங்க கவசத்தை ஓ.பன்னீர்செல்வம் ஒப்படைத்தார்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தேவரின் தங்க கவசம் வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அதனை விழா குழுவிடம், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்படைத்தார்.
மதுரை,
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. அங்கு ஆண்டுதோறும் அக்டோபர் 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா கொண்டாடப்படுகிறது. அங்குள்ள தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று கடந்த 2014-ம் ஆண்டு, 13½ கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.
அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தி, குரு பூஜை விழாவின் போது தேவர் சிலைக்கு அந்த தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்து வருகிறது. விழா நிறைவு பெற்ற பின்பு, தங்க கவசம் பலத்த பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டு மதுரையில் உள்ள ‘பேங்க் ஆப் இந்தியா’ வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்படும்.
இந்த தங்க கவசத்தை எடுக்கும் பொறுப்பாளராக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிட அறங்காவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
வருகிற 28-ந் தேதி தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை தொடங்குகிறது. இதையொட்டி தங்க கவசத்தை பெறுவதற்காக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதுரை அண்ணாநகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு வந்தார்.
அவர் ஆவணங்களில் கையெழுத்திட்ட பின்பு வங்கி அதிகாரிகள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து தங்க கவசத்தை எடுத்து அவரிடம் வழங்கினர். பின்னர் ஓ.பன்னீர்செல்வம், தேவரின் தங்க கவசத்துக்கு மாலை அணிவித்து, விழா குழுவினரிடம் ஒப்படைத்தார். அப்போது அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மதுரை மாவட்ட கலெக்டர் வினய், எம்.எல்.ஏ.க்கள் ராஜன்செல்லப்பா, சரவணன், மாணிக்கம், தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்திமீனாள், அ.தி.மு.க. நிர்வாகிகள் எம்.எஸ்.பாண்டியன், ராஜா, அய்யப்பன், சாலைமுத்து, முத்துராமலிங்கம், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், கலைச்செல்வம், வெற்றிவேல், ஐ.பி.எஸ்.பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் தங்க கவசம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.விற்கு மக்கள் நல்ல தீர்ப்பை தந்துள்ளனர். எங்களின் மீது மக்களின் நம்பிக்கை உறுதியாக இருப்பதை இந்த இடைத்தேர்தலின் வெற்றி காண்பிக்கிறது. இந்த வெற்றி மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைக்கு கிடைத்த வெற்றி.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் 3 சட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க.வும், 3 தொகுதிகளில் தி.மு.க.வும் வெற்றி பெற்றது. அப்போதே மக்கள் ஒரு நல்ல மாற்றத்தை விரும்பி வாக்களித்துள்ளனர் என்பது தெளிவானது. மேலும் தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க. தான் ஆளும் உரிமையை மக்களிடம் பெற்ற ஒரே கட்சியாக விளங்குகிறது. மராட்டியம், அரியானா மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் பா.ஜனதா கட்சிக்கு மக்கள் வாக்களித்து உள்ளனர். இதன் மூலம் அந்த மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியை தக்க வைத்து கொண்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 30-ந் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.