வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்பியதால் டி.வி. ஒளிப்பதிவாளர் தூக்குப்போட்டு தற்கொலை
வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்பியதால் ஜோலார்பேட்டையில் சின்னத்திரை ஒளிப்பதிவாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய மனைவி போலீசில் புகார் செய்துள்ளார்.
ஜோலார்பேட்டை,
திருவள்ளூர் மாவட்டம் செந்நீர்குப்பம் லீலாவதி நகர் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் சசிக்குமார் (வயது 47). சென்னையில் டி.வி. ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு ராகவி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 9-ந் தேதி காலை பணி காரணமாக வெளியே செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற சசிக்குமார் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில்வே ஜங்ஷன் பஸ் நிறுத்தம் அருகே, ஏரியில் உள்ள மரத்தில் ஆண் பிணம் தூக்கில் தொங்கியபடி கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றினர். அவரது பாக்கெட்டில் இருந்த மணிப்பர்சை பார்த்த போது அதில் ஆதார் கார்டு இருந்தது.
ஆதார் கார்டில் இருந்த பெயர் விவரங்களை வைத்து நடத்திய விசாரணையில் பிணமாக தொங்கியவர் சசிக்குமார் என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரது பாக்கெட்டில் ஆம்பூர் வரை செல்லும் ரெயில் டிக்கெட்டும் இருந்தது. இதையடுத்து சசிக்குமார் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சசிக்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர்அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் நேற்று ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வந்தார்கள். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஸ்டூடியோவில் சசிக்குமார் ஒளிப்பதிவாளராக வேலை செய்து வந்தார். அவருடன் மகேஷ் என்பவர் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் ஒரு பணிக்காக சசிக்குமார் வாடகைக்கு கேமரா எடுத்துச்சென்ற விவகாரத்தில் சசிக்குமாருக்கும், மகேசுக்கும் தகராறு ஏற்பட்டது.
இது தொடர்பாக மகேஷ் வாட்ஸ்-அப் குரூப்பில் சசிக்குமார் பற்றி அவதூறாக தகவல் பரப்பி சசிக்குமாரை மிரட்டி வந்துள்ளார். இதுதவிர சசிக்குமார் மீது சென்னை விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதன்காரணமாக அவமானம் ஏற்பட்டதால் சசிக்குமார் மனவேதனையில் இருந்துள்ளார். இதனால் கடந்த 9 -ந் தேதி வெளியே செல்வதாக கூறி சென்ற சசிக்குமார் தற்போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
இது குறித்து அவரது மனைவி நேற்று ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது கணவர் சாவில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றார்.