மருத்துவ உதவிக்காக தவிக்கும் பரவை முனியம்மா - உடல்நலம் குன்றி படுத்த படுக்கையானார்
உடல் நலம் குன்றி படுக்கையில் இருக்கும் பரவை முனியம்மாவின் சிகிச்சைக்கு உதவ வேண்டும் என்று அவருடைய குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை,
‘சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி...’ என்ற பாடல் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானவர் பரவை முனியம்மா.
ஏராளமான கிராமிய பாடல்கள், சினிமா பாடல்கள் பாடியவர். 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மதுரை மாவட்டம் பரவை என்ற ஊரை சேர்ந்தவர் என்பதால் ‘பரவை முனியம்மா’ என மக்களால் அழைக்கப்படுகிறார்.
தமிழக அரசின் ‘கலைமாமணி‘ விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்ற அவர், கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்த சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படத்தில் கடைசியாக நடித்திருந்தார். அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. இதனை தொடர்ந்து அவர், சொந்த ஊரான பரவைக்கு வந்து விட்டார். அங்கு மூளைவளர்ச்சி குன்றிய தனது மாற்றுத்திறனாளி மகனுடன் தனியாக வசித்தார்.
பரவை முனியம்மாவுக்கு 3 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். மாற்றுத்திறனாளி மகன் செந்தில்குமாரை தவிர, மற்றவர்களுக்கு திருமணமாகிவிட்டது.
85 வயதை எட்டிவிட்டதால் சரிவர காது கேட்காத நிலையிலும், வாய் பேசமுடியாத நிலையில் உடல்நலம் குன்றி, படுத்த படுக்கையாக இருந்துவருகிறார். தனக்கு பிறகு மகன் செந்தில்குமாரை யார் கவனிப்பார்கள்? என்பதுதான் பரவை முனியம்மாவுக்கு நீங்காத கவலையாக இருக்கிறது. தனது மகனுக்கு திரை உலகத்தினரும், அரசும் ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும் என்பதே பரவை முனியம்மாவின் கோரிக்கை.
நோய்வாய்ப்பட்ட பரவை முனியம்மாவை அவருடைய மகள்கள் வள்ளி, ராக்கு, ஈஸ்வரி, மருமகள் முத்துலட்சுமி ஆகியோர் கவனித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக அவருடைய மகள்கள் கூறியதாவது:-
படவாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருந்தபோது அம்மாவுக்கு ஒரே ஆறுதல் எங்க அப்பா தான். அவர் கடந்த 2014-ல் இறந்து விட்டார். அதன் பிறகுதான் அம்மாவின் உடல்நிலை மோசமாகிவிட்டது. கடந்த வாரம் மதுரை காளவாசலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். இதயத்திலும், நுரையீரலிலும் நீர் கோர்த்து இருப்பதாகவும் டாக்டர்கள் கூறினர்.
மருத்துவச் செலவுக்கு போதிய பணம் இல்லாததால் வீட்டிலேயே படுத்த படுக்கையாக என் தாயார் இருந்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் வந்து அம்மாவை நேரில் வந்து பார்த்து கைச் செலவுக்கு ரூ.25 ஆயிரம் கொடுத்தார். வேறு யாரும் வரவில்லை.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையின் பேரில், எங்கள் தாயாருக்கு மாதந்தோறும் கிடைக்கும் ரூ.6 ஆயிரத்தை வைத்துதான் மருத்துவச் செலவுகளை சமாளித்து வருகிறோம். அவரால் உணவு எதுவும் சாப்பிட முடியவில்லை. தண்ணீர் ஆகாரம்தான் கொடுக்கிறோம். மருத்துவமனையிலும், வீட்டிலும் அவர் படும் கஷ்டத்தை தாங்க முடியவில்லை. அவரது சிகிச்சைக்கு உதவ வேண்டும்.
இவ்வாறு அவர்கள் உருக்கமாக கூறினர்.