அச்சரப்பாக்கம் அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
அச்சரப்பாக்கம் அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து டிரைவர் பலியானார்.
அச்சரப்பாக்கம்,
காஞ்சீபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கத்தை அடுத்த காட்டுக்கூடலூரில் தனியார் பால் நிலையம் உள்ளது. இங்கிருந்து பால் டேங்கர் லாரியில் ஆந்திர மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. காட்டுக் கூடலூர் அருகே செல்லும்போது மான்கள் சாலையின் குறுக்கே சென்றன. இதனால் டேங்கர் லாரி டிரைவர் திடீர் என்று பிரேக் பிடித்தார். இதில் லாரி கவிழ்ந்தது.
லாரியை ஓட்டிச்சென்ற ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் பொத்த வீரபள்ளி கிராமத்தை சேர்ந்த சிவராம ராஜ் (வயது 49). சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து அங்கு வந்த அச்சரப்பாக்கம் போலீசார் சிவராமராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அச்சாப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டுரங்கன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த போந்துர் கிராமத்தை சேர்ந்தவர் தாஸ். இவரது மனைவி தனலட்சுமி (34). இவர் தெரசாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலை வேலைக்கு நடந்து சென்றார். தெராசபுரம் பகுதியில் செல்லும்போது ஒரகடம் நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் தனலட்சுமி மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த தனலட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மாத்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தனலட்சுமி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.