கோபி அருகே, கல்லூரி பேராசிரியையின் ஸ்கூட்டரில் இருந்த 7 பவுன் நகை திருட்டு
கோபி அருகே கல்லூரி பேராசிரியையின் ஸ்கூட்டரில் இருந்த 7 பவுன் நகை திருட்டு போனது.
கடத்தூர்,
கோபி அருகே உள்ள உடையாகவுண்டன்பாளையம் வடக்கு வீதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார். அவருடைய மனைவி பெலிசா (வயது 30). இவர் கோபியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஆங்கில உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் மாலை அவர் கல்லூரி முடிந்து ஸ்கூட்டரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். கொடிவேரி பிரிவு அருகே சென்றபோது அந்த பகுதியில் மழை பெய்தது.
இதனால் பெலிசா ஸ்கூட்டரை அங்குள்ள மினியப்பன் கோவில் அருகே நிறுத்திவிட்டு இறங்கினார். பின்னர் மழையில் நனையாமல் இருக்க கோவிலில் ஒதுங்கி நின்றார். சிறிது நேரத்தில் மழை நின்றதும் வீட்டுக்கு செல்வதற்காக ஸ்கூட்டரை நோக்கி சென்றார்.
அப்போது அவரது ஸ்கூட்டரின் வைக்கப்பட்டு இருந்த பையை காணவில்லை. அதில் வங்கியில் அடமானம் வைப்பதற்காக 7 பவுன் தாலிசங்கிலியும், ரூ.500-ம் இருந்தது. மழையை பயன்படுத்தி மர்மநபர் அந்த பையை திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பெலிசா கடத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.