மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் - கலெக்டர் கதிரவன் வேண்டுகோள்
மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று கலெக்டர் சி.கதிரவன் வேண்டுகோள் விடுத்து உள்ளார். ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
ஈரோடு,
தமிழர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்றாகும். மக்களுக்கு இன்னல்களை கொடுத்து வந்ததாக புராணங்களில் சொல்லப்படும் நரகாசுரனை அழித்த தினத்தை நினைவுகூரும் வகையில் தீபங்களுடன் தீபாவளியை மக்கள் கொண்டாடி வருகின்றனர். தீபாவளி பண்டிகையில் சந்தோசத்தை வெளிப்படுத்த பட்டாசு வெடிப்பது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் பட்டாசுகளை வெடிப்பதால் எழும் ஒலி தற்காலிக செவிட்டு தன்மையும், தொடர் ஓசை நிரந்தமான செவிட்டு தன்மையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதிக ஒலி மற்றும் ஒளியுடன் கூடிய பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசினை தடுக்கும் வண்ணம் பொது நல வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதி 23.10.2018 அன்று ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது.
அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் தயாரிப்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஒலி மற்றும் காற்று மாசு குறித்தும், விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்தும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், பயன்படுத்தப்படும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
அதன்படி தயாரிக்கப்படும் பட்டாசுகளில் அடங்கியுள்ள வேதிப்பொருட்கள் மற்றும் ஒலி அளவின் விவரத்தை பட்டாசு பேக்கிங் பெட்டியில் குறிப்பிட வேண்டும். நான்கு மீட்டர் தூரத்தில் 125 டெசிபல் அல்லது 145 டெசிபல் அளவைவிட அதிக சத்தத்தை எழுப்பும் பட்டாசுகளை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது.
சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் 125 டெசிபல் அளவிற்கு மேல் ஒலி எழுப்பும் பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. கோர்ட்டு வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
எனவே குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடித்து ஒலி மற்றும் காற்று மாசில்லா சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஒலி மற்றும் காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசு வகைகளை தவிர்த்து வண்ண ஒளி தீபங்களால் தீபாவளியை அனைவரும் சிறப்பாக கொண்டாடுவோம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.