தொழில் தொடங்க ஆர்வமுள்ளோர் நலன் கருதி வங்கிக்கடன் பெற வழிகாட்டி மையம் - கலெக்டர் தகவல்

தொழில் தொடங்க ஆர்வமுள்ளோர் நலன் கருதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வங்கிக்கடன் பெற வழிகாட்டு மையம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறினார்.;

Update: 2019-10-24 22:30 GMT
தேனி,

தேனி அருகே அன்னஞ்சி விலக்கு பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் தமிழ்நாடு கிராம வங்கியின் சார்பில் வாடிக்கையாளர்கள் சந்திப்பு முகாம் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று வரை 2 நாட்கள் நடந்தது. இந்த முகாமில் வங்கிகள் மற்றும் மாவட்ட தொழில் மையம், தாட்கோ சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி மற்றும் வழிகாட்டி அரங்குகளை நேற்று கலெக்டர் பார்வையிட்டார். பின்னர் நடந்த விழாவில் கலெக்டர் பல்லவி பல்தேவ் பேசியதாவது:-

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்க அரசு பல்வேறு மானியங்களுடன் வங்கிக் கடன் பெற வழிவகைகள் செய்து உள்ளன. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வரும் பலரும், தங்களுக்கு வேலை வாய்ப்பு கேட்டு மனு அளிப்பதை பார்க்க முடிகிறது. அவ்வாறு வேலை கேட்டு மனு அளிக்க வரும் நபர்களுக்கு புதிய தொழில் தொடங்க அரசு வழங்கும் மானியங்கள் குறித்து எடுத்துக் கூறி வருகிறோம்.

எனவே புதிய தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர் களின் நலன் கருதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வங்கிக்கடன் பெறுவதற்கான வழிகாட்டி மையம் தொடங்கப்பட உள்ளது.

இந்த மையம் அடுத்த மாதம் (நவம்பர்) முதல் வாரத்தில் இருந்து மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் செயல்படும்.

இங்கு அரசு மானிய திட்டங்கள், அதற்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள், வங்கிக்கடன் பெறுவதற்கான நடைமுறைகள், வட்டி மானியம், அரசு மானியம் தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்கப்படும். புதிதாக தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள் இந்த வழிகாட்டி மையத்துக்கு நேரடியாக சென்று ஆலோசனைகள், வழிகாட்டுதல்களை பெறலாம். இங்கு ஒவ்வொரு வங்கியிலும் என்னென்ன சலுகைகள் அளிக்கப்படுகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த வாடிக்கையாளர்கள் சந்திப்பு முகாமில் 2 ஆயிரத்து 360 பேருக்கு மொத்தம் ரூ.54 கோடியே 65 லட்சம் மதிப்பில் பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராமசுப்பிரமணியன், சென்னை கனரா வங்கி பொது மேலாளர் அப்துல் அஜீஸ், பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் ராஜசேகர், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் சுப்பிரமணியன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளர் ராமானுஜம், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் புவனேஸ்வரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அகிலன் மற்றும் வங்கி அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்