பெட்ரோல் நிலைய ஊழியர்களை மிரட்டி ரூ.1½ லட்சம் திருடிய வழக்கில் 2 பேர் கைது

வெங்கல் அருகே பெட்ரோல் நிலைய ஊழியர்களை கத்தி முனையில் மிரட்டி ரூ.1½ லட்சம் திருடிய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2019-10-24 22:45 GMT
பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பூச்சிஅத்திப்பட்டு கிராமத்தில் சென்னை அம்பத்தூரை சேர்ந்த மூர்த்தி என்பவர் பெட்ரோல் நிலையம் நடத்தி வருகிறார். இந்த பெட்ரோல் நிலையத்தில் கடந்த 13-ந் தேதி ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் பெட்ரோல் நிலைய ஊழியர்களை கத்திமுனையில் மிரட்டி பீரோவில் இருந்த ரூ.1½ லட்சத்தை திருடிக்கொண்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து மூர்த்தி வெங்கல் போலீசில் புகார் செய்தார். ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேலு மற்றும் தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், இதுதொடர்பாக சோழவரம் எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சதீஷ் (வயது 20), சக்திவேல் (20) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் பெட்ரோல் நிலையத்தில் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனர். அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிள், ஒரு செல்போன் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவள்ளூர் முதல்நிலை குற்றவியல் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தினர். பின்னர், இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.

தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சிறையில் அடைக்கப்பட்ட சதீஷ் மீது சோழவரம் போலீஸ் நிலையத்தில் 3 வழக்குகளும், மணலி போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும் உள்ளது. சக்திவேல் மீது சோழவரம் போலீஸ் நிலையத்தில் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் செய்திகள்