தியாகதுருகம் அருகே, கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு - சிறுவன் உள்பட 3 பேர் கைது

தியாகதுருகம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-10-24 22:30 GMT
கண்டாச்சிமங்கலம்,

தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி கிராமத்தில் புற்று மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அதேஊரை சேர்ந்த சடையன்(வயது 38) என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இவர் நேற்று அதிகாலை வழக்கம்போல் பூஜை செய்வதற்காக கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவில் வளாக இரும்பு கதவு பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, சன்னதி முன்பு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த காணிக்கை பணத்தை காணவில்லை. அதனை மர்மநபர்கள் யாரோ? கோவில் கதவு பூட்டையும், உண்டியலையும் உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து பூசாரி சடையன் தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் சூளாங்குறிச்சி-கள்ளக்குறிச்சி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் போலீசாரை பார்த்ததும் சற்று முன்னதாகவே திரும்பி செல்ல முயன்றனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் தப்பிச் செல்ல முயன்ற 3 பேரையும் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், 3 பேரும் சின்னசேலம் அடுத்த எலியத்தூரை சேர்ந்த பூவரசன்(18), விக்னேஷ்(19) மற்றும் 16 வயது சிறுவன் என்பதும், நேற்று முன்தினம் நள்ளிரவு பல்லகச்சேரி புற்றுமாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து, அதில் இருந்த 2 ஆயிரத்து 226 ரூபாயை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து பூவரசன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்