திண்டிவனத்தில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதல்; ஓட்டல் மேலாளர் பலி

திண்டிவனத்தில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் ஓட்டல் மேலாளர் பலியானார்.

Update: 2019-10-24 22:45 GMT
திண்டிவனம், 

திண்டிவனம் அருகே உள்ள பாங்கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45). திண்டிவனத்தில் உள்ள ஒரு ஓட்டலில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு திண்டிவனத்தில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். திண்டிவனம்-சென்னை புறவழிசாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார்சைக்கிளும், கிருஷ்ணமூர்த்தி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக் கொண்டன.

இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சலவாதி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதைபார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் சுரேசை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே விபத்து பற்றி தகவல் அறிந்த திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்