ஹாவேரி அருகே சோகம் வரதா ஆற்றில் மூழ்கி சிறுவன் சாவு காப்பாற்ற முயன்ற முதியவரும் பலியான சோகம்

ஹாவேரி அருகே வரதா ஆற்றில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான். அவனை காப்பாற்ற முயன்ற முதியவரும் தண்ணீரில் மூழ்கி பலியானார்.

Update: 2019-10-24 22:15 GMT
பெங்களூரு, 

ஹாவேரி அருகே வரதா ஆற்றில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான். அவனை காப்பாற்ற முயன்ற முதியவரும் தண்ணீரில் மூழ்கி பலியானார்.

இந்த சோக சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

தண்ணீரில் மூழ்கி 2 பேர் சாவு

ஹாவேரி மாவட்டம் ஹந்திகனூரா கிராமத்தை சேர்ந்தவன் சோமப்பா (வயது 16). இந்த கிராமத்தின் அருகே வரதா ஆறு ஓடுகிறது. தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக வரதா ஆற்றில் அதிகளவில் வெள்ளம் செல்கிறது. இந்த நிலையில் நேற்று சோமப்பா எருமை மாடுகளை குளிப்பாட்டுவதற்காக ஆற்றுக்கு சென்றான். ஆற்றில் இறங்கிய சோமப்பா மாடுகளை குளிப்பாட்டிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக அவன் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதால், நீரில் மூழ்கி தத்தளித்தான்.

இதை ஆற்றங்கரையில் நின்றிருந்த பரமேசப்பா கம்மார் (62) என்பவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் சோமப்பாவை காப்பாற்ற ஆற்றில் குதித்தார். ஆனால், வெள்ளம் அதிகமாக சென்றதால் பரமேசப்பா கம்மாராலும் நீச்சல் அடிக்க முடியவில்லை. இதனால் அவரும் தண்ணீரில் மூழ்கினார். சிறிது நேரத்தில் சோமப்பா, பரமேசப்பா கம்மார் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

உடல் மீட்பு

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் ஆற்றில் மூழ்கி பலியான 2 பேரின் உடல்களையும் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

முதலில் பரமேசப்பா கம்மாரின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆற்றில் சோமப்பாவின் உடலை தேடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து குக்கலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்