மோடி அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை காட்டுகிறது சித்தராமையா பேட்டி
மராட்டியம், அரியானா தேர்தல் முடிவுகள் மூலம் நாட்டில் மோடி அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
மராட்டியம், அரியானா தேர்தல் முடிவுகள் மூலம் நாட்டில் மோடி அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு விதானசவுதாவில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்
மராட்டியம் மற்றும் அரியானா மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரத்தின்படி கடந்த தேர்தலில் மராட்டியம், அரியானா மாநிலங்களில் பா.ஜனதாவுக்கு இருந்த செல்வாக்கு குறைந்துள்ளது. 2 மாநிலங்களிலும் கடந்த முறை வெற்றி பெற்ற தொகுதிகளை விட தற்போது குறைந்த தொகுதிகளிலேயே பா.ஜனதாவினர் வெற்றி பெற்றுள்ளனர்.
மராட்டிய மாநிலத்தில் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. ஆனாலும் பா.ஜனதா தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க முடியாத நிலை இருக்கிறது. அரியானாவில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அந்த மாநிலத்தில் மற்ற கட்சிகள், சுயேச்சைகளுடன் சேர்ந்து காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ஓட்டு சதவீதம் அதிகரிப்பு
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் 2 மாநிலங்களிலும் பா.ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று வெளியாகி இருந்தது. அந்த கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது பொய்யாகி உள்ளது. மராட்டியம், அரியானாவில் பா.ஜனதாவின் ஓட்டு சதவீதமும் கடந்த தேர்தலில் இருந்து தற்போது மிகவும் குறைந்து விட்டது. காங்கிரஸ் கட்சி சில பிரச்சினைகளை சந்தித்தது. காங்கிரசின் முக்கிய தலைவர்கள் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவுக்கு சென்றனர். அப்படி இருந்தும் மராட்டிய மாநிலத்தில் காங்கிரசின் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது.
அரியானாவில் பா.ஜனதா ஆட்சி அமைக்க சாத்தியமில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அரியானாவில் ஓரிரு தொகுதிகளில் மட்டுமே பா.ஜனதா வெற்றி பெற்றிருந்தது. நாடாளுமன்ற தேர்தல் வேறு, சட்டசபை தேர்தல் வேறு என்பதை தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். மத்தியில் கடந்த 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது செய்த சாதனைகளை விளக்கி பிரதமர் மோடி பிரசாரம் செய்யவில்லை. மேலும் அவர் இனிவரும் நாட்களிலும் நாட்டின் வளர்ச்சிக்காக எந்த திட்டங்களை செயல்படுத்துவோம் என்பதையும் மக்களிடம் சொல்லவில்லை.
மோடி தலைமை மீதான...
பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் பிரச்சினையை வைத்து மட்டுமே பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். இதனை மராட்டியம், அரியானா மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பாகிஸ்தான், காஷ்மீர் பிரச்சினை குறித்து பிரதமர் மோடி பேசுவதை மக்கள் புறக்கணித்துள்ளனர். நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்திருப்பதை நாட்டு மக்கள் அறிந்து வைத்துள்ளனர். மராட்டியம், அரியானா தேர்தல் முடிவுகள் பா.ஜனதாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. அரியானாவில் பா.ஜனதா ஆட்சியை இழக்கிறது. மராட்டியத்தில் சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கிறது.
மராட்டியத்தில் சிவசேனா ஏதாவது பிரச்சினை செய்தால், அங்கு பா.ஜனதாவால் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்படும். இந்த தேர்தல் முடிவுகள் மூலம் நாட்டில் மோடி அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை காட்டுகிறது. மக்கள் சரியான தீர்ப்பு வழங்கியுள்ளனர். மராட்டியத்தில் காங்கிரஸ், கூட்டணி கட்சிகளை ஆதரித்து 3 தொகுதிகளில் நான் பிரசாரம் செய்தேன். அதில், 2 தொகுதிகளில் வெற்றி கிடைத்துள்ளது. நான் பிரசாரம் செய்ததால் அந்த வெற்றி கிடைத்ததாக கூறவில்லை.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.