சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்வார் சித்தராமையா சொல்கிறார்

சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்வார் என்று சித்தராமையா தெரிவித்து உள்ளார்.

Update: 2019-10-24 22:30 GMT
பெங்களூரு, 

சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்வார் என்று சித்தராமையா தெரிவித்து உள்ளார்.

பெங்களூருவில் நேற்று முன்னாள் முதல்-மந்திரியும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது;-

பதவியை ராஜினாமா செய்வார்

கர்நாடகத்தில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு டிசம்பர் மாதம் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மராட்டியம், அரியானா மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள், கர்நாடகத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இடைத்தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகளிலும் பா.ஜனதா தோல்வி அடைவது உறுதி. காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதா சார்பில் போட்டியிடுபவர்கள் இடைத்தேர்தலில் தோல்வியை சந்திப்பார்கள்.

குதிரை பேரத்தில் ஈடுபட்டு எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி இருந்தனர். தற்போது இடைத்தேர்தலை எதிர்கொள்கிறார்கள். இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யும் நிலை எடியூரப்பாவுக்கு ஏற்படும். முதல்-மந்திரி பதவியை மீண்டும் அவர் ராஜினாமா செய்வார். காங்கிரசை விட்டு சென்றவர்களை மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை.

அரசு தோல்வி

வடகர்நாடக மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் நிவாரண பணிகளை மேற்கொள்ளாமல் அரசு வேடிக்கை பார்க்கிறது. நான் பாதாமிக்கு சென்றிருந்த போது, அங்குள்ள மக்கள் தங்களது கஷ்டத்தை கூறினார்கள். நிவாரண உதவிகள் கிடைக்காமல் மக்கள் பரிதவிக்கின்றனர். இதற்கு பா.ஜனதா அரசு முழு காரணம். வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வதில் அரசு முழுமையாக தோல்வி அடைந்துவிட்டது.

மழை, வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு 3 மாதங்கள் ஆகியும் இன்னும் மாவட்ட பொறுப்பு மந்திரிகள், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவில்லை. மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்கவில்லை. டி.கே.சிவக்குமார் ஜாமீனில் விடுதலையாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு எந்த பதவி வழங்க வேண்டும் என்பதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்