கொருக்குப்பேட்டையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

கொருக்குப்பேட்டையில், குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-10-23 23:00 GMT
பெரம்பூர்,

சென்னை கொருக்குப்பேட்டை காரணீஸ்வரர் நகர், கஸ்தூரிபாய் தெரு ஆகிய பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சென்னை குடிநீர் வாரியம் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களாக குழாய்கள் மூலம் சீராக குடிநீர் வழங்காமல் லாரிகள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக லாரிகளிலும் குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் குடிநீர் இன்றி அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள் நேற்று காலை திடீரென கையில் காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு கொருக்குப்பேட்டை-எண்ணூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆர்.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலைமையிலான போலீசார் மற்றும் தண்டையார்பேட்டை 4-வது மண்டல குடிநீர் வாரிய பகுதி பொறியாளர் ஏழுமலை ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஏழுமலை கூறும்போது, “குடிநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக கடந்த சில தினங்களாக மீஞ்சூரில் இருந்து பட்டேல் நகரில் உள்ள நீரேற்று நிலையத்துக்கு சீராக தண்ணீர் வரவில்லை. இதனால் குழாய்களில் தண்ணீர் வராத பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது குழாயில் ஏற்பட்ட அடைப்பு சரி செய்யப்பட்டு விட்டதால் இனிமேல் குழாய்களில் சீராக குடிநீர் வரும். தற்காலிகமாக லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும்” என உறுதி அளித்தார்.

அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்