தொழில் அதிபர் வீட்டில் ரூ.20 லட்சம் திருடி, நகை வாங்கிய வேலைக்கார பெண் கைது

தொழில் அதிபர் வீட்டில் ரூ. 20 லட்சம் பணத்தை திருடி, நகைகள் வாங்கிய வேலைக்கார பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-10-23 22:00 GMT
சென்னை,

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசிப்பவர் பெரியண்ணன்(வயது 33). தொழில் அதிபரான இவரது வீட்டில் தரமணியை சேர்ந்த உஷா(53) என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக வீட்டு வேலைகள் செய்து வந்தார். தொழில் அதிபர் பெரியண்ணன் தனது வீட்டின் படுக்கையறையில் வைத்திருந்த ரூ.20 லட்சம் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

வேலைக்கார பெண் உஷா தினமும் புதிது புதிதாக தங்க நகைகளை அணிந்து வந்தார். இதைப்பார்த்த தொழில் அதிபருக்கு வேலைக்கார பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து அபிராமபுரம் போலீசில் புகார் கொடுத்தார்.

அபிராமபுரம் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து வேலைக்கார பெண் உஷாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ரூ.20 லட்சத்தை திருடி அந்த பணத்தில் 45 பவுன் தங்க நகைகள் வாங்கியதாக தெரிவித்தார். இதையடுத்து உஷா கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 45 பவுன் நகை மீட்கப்பட்டது.

மேலும் செய்திகள்