அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள கோவிந்தராஜபுரம் 6-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-10-23 22:45 GMT
வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள கோவிந்தராஜபுரம் 6-வது வார்டு பகுதியில் உள்ள அனைத்து நகர் தெருக்களிலும் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக தெரிகிறது. இதனால் மழைக்காலங்களில் இந்த சாலைகள் வழியே செல்லும் வாகனஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் இப்பகுதியில் சரியான முறையில் குடிநீர் வசதியும் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. கோவிந்தராஜபுரம் பகுதியில் மின் மயானம் அமைத்து தர கோரிக்கை விடுத்து பேரூராட்சியில் மனுக்கள் அளிக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறி உள்ளனர்.

இதனால் பேரூராட்சி அதிகாரிகளை கண்டித்தும், உடனடியாக கோவிந்தராஜபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும் 6-வது வார்டு பொதுமக்கள் கூடுவாஞ்சேரி பஸ்நிறுத்தம் அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூர் தி.மு.க., பொறுப்பாளர் வக்கீல் ஜி.கே.லோகநாதன் கலந்துகொண்டு பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன உரையாற்றினார். அப்போது 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பொதுமக்கள் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்