தனியார் பள்ளி பஸ் மோதி 2 வயது சிறுமி பலி
குஜிலியம்பாறை அருகே தனியார் பள்ளி பஸ் மோதி 2 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தது.
குஜிலியம்பாறை,
குஜிலியம்பாறை அருகே உள்ள வான்ராயன்பட்டியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 37). இவர், கரூர் மாவட்டம் நல்லூரான்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருடைய மகள் மகிழ்மித்ரா (2). இவளது சித்தப்பா ராஜேந்திரன். இவர், குஜிலியம்பாறை அருகே தி.கூடலூரில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அந்த பள்ளியில் அவருடைய மகள் பிரனிதா (3) எல்.கே.ஜி. படிக்கிறாள். இவள், தினமும் பள்ளி பஸ்சில் வான்ராயன்பட்டிக்கு வருவது வழக்கம்.
அதன்படி நேற்று மாலை பள்ளி முடிந்து பிரனிதா பள்ளி பஸ்சில் வந்தாள். அவளை பார்ப்பதற்காக மகிழ்மித்ரா, வான்ராயன்பட்டி பஸ் நிறுத்தத்துக்கு சென்றாள். அப்போது பஸ்சின் முன்பக்கத்துக்கு மகிழ்மித்ரா ஓடி வந்தாள். இதனை கவனிக்காத டிரைவர், பஸ்சை இயக்கினார். இதில் முன்பக்க சக்கரத்தில் சிக்கிய மகிழ்மித்ரா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாள்.
இதுகுறித்து தரகம்பட்டியை சேர்ந்த பஸ் டிரைவர் சண்முகசுந்தரம் (29) மீது, குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளி பஸ் மோதி சிறுமி பலியான சம்பவத்தால் வான்ராயன்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியது.