மக்காச்சோளப் பயிரில் படைப்புழு: அரசு உடனே தடுப்பு மருந்து வழங்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

மக்காச்சோளப்பயிரில் படைப்புழு தாக்குதல் தடுப்பு மருந்தை அரசு உடனே வழங்க வேண்டும் எனறு குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-10-23 22:15 GMT
தாராபுரம்,

தாராபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்- கலெக்டர் பவன்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் தரப்பில், ஈஸ்வரமூர்த்தி, காளிமுத்து, சுப்பிரமணி, ராசு மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:-

விவசாயத்திற்கு மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்கள், தட்கல் திட்டத்தின் கீழ் கடந்த 16-ந்தேதி முதல் வரும் 31-ந்தேதி வரை விண்ணப்பித்து மின் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம் என அறிவிப்பு செய்யப்பட்டது. இதனால் 1,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள், தட்கல் திட்டத்தில் மின் இணைப்பு பெறுவதற்காக வங்கியில் பணம் செலுத்தி, வரைவோலை பெற்றுள்ளனர். இந்த நிலையில் மின்சார வாரிய அதிகாரிகள் 16-ந்தேதி ஒரு நாள் மட்டும் விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டு, பிறகு விண்ணப்பங்களை வாங்க மறுத்துவிட்டனர். இதனால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே தாராபுரம் தாலுகாவில் குறைந்தது 1,000-விவசாயிகளுக்காவது, தட்கல் திட்டத்தில் மின் இணைப்பு வழங்க வேண்டும். திருப்பூர் சாலையில் சுங்கம் பகுதியிலிருந்து, சங்கரண்டாம்பாளையம் சாலை வரை உள்ள இணைப்பு சாலை, மிகவும் சேதமடைந்துவிட்டது. தற்போது வாகனங்கள் செல்ல முடிவதில்லை. எனவே இணைப்பு சாலையை நெடுஞ்சாலைத்துறை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பி.ஏ.பி.திட்டத்திற்கு தண்ணீர் வழங்கும் அனைத்து அணைகளும் நிரம்பி விட்டது. மேலும் பி.ஏ.பி.பாசன பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

எனவே பி.ஏ.பி.யின் உபரி நீரை உப்பாறு அணைக்கு வழங்க முடியும். இதனால் உப்பாறு அணைக்கு உட்பட்ட 5 ஊராட்சிகளுக்கு உயிர் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே உப்பாறு அணைக்கு உபரிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது அமராவதி மற்றும் பி.ஏ.பி.பாசன விவசாயிகளுக்கு யூரியா உரம் அதிகம் தேவைப்படுகிறது. கிராமத்தில் உள்ள உரக்கடைகளில் யூரியா கிடைப்பதில்லை. நகர் பகுதியில் உள்ள உரக்கடைகளில் யூரியா உரம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்.

விவசாயிகளுக்கு யூரியா உரம் தாராளமாகவும், உரிய விலையிலும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அமராவதி வடிநில கோட்டத்தில் உயர் அதிகாரிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளது. நிரந்தரமாக அதிகாரிகள் இல்லை. இதனால் நீர் மேலாண்மை சரிவர நடை பெறுவதில்லை. அமராவதி அணையில் தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. தற்போதுள்ள அதிகாரிகள் பாசன சங்க தலைவர்களிடம் ஆலோசனை நடத்தி, அமராவதி அணையிலிருந்து முறையாக தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பகுதியில் மக்காச்சோளம் சாகுபடி செய்து 45 நாட்கள் ஆகிவிட்டது.

படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கு அரசு சார்பில் தடுப்பு மருந்து வழங்குவதாக அறிவிக்கப்பட் டது. ஆனால் இதுவரை தடுப்பு மருந்து வழங்கவில்லை. முதற்கட்டமாக ரூ.3ஆயிரம் செலவு செய்து விவசாயிகள் தாங்களாகவே தடுப்பு மருந்து அடித்துக் கொண்டனர். தற்போது 2-ம் முறைக்கு தடுப்பு மருந்து தேவைப்படுகிறது. ஆகவே அரசு உடனடியாக தடுப்பு மருந்து வழங்க வேண்டும். மக்காச்சோளப் பயிர்களுக்கு காப்பீடு செய்வதில் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகிறார்கள். உடனடியாக பயிர் காப்பீட்டிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இறுதியில் சப்-கலெக்டர் பவன்குமார் பேசும் போது, வேளாண்துறை அதிகாரிகள் உடனடியாக தாராபுரம், காங்கேயம் தாலுகாவிற்கு உட்பட்ட உரக்கடைகளில் ஆய்வு நடத்தி, யூரியா உரம் இருப்பு குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு எளிதில் யூரியா உரம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு வழங்கும் படைப்புழு தடுப்பு மருந்து, விவசாயிகளுக்கு கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் அந்தந்த துறைகளுக்கு தெரிவிக்கப்பட்டு உடனடியாக தீர்வு ஏற்படுத்தப்படும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்