விருதுநகர் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள திடக்கழிவு மறுசுழற்சி மையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும்; நகராட்சி நிர்வாக ஆணையருக்கு மனு

விருதுநகர் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள திடக்கழிவு மறுசுழற்சி மையத்தினை நகருக்கு வெளியே இடமாற்றம் செய்ய உத்தரவிடக்கோரி நகராட்சிகளின் நிர்வாக ஆணையருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

Update: 2019-10-23 22:45 GMT
விருதுநகர்,

விருதுநகர் நகராட்சி முன்னாள் துணை தலைவர் பால கிருஷ்ணசாமி, நகராட்சிகளின் நிர்வாக ஆணையருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

விருதுநகரில் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக வீட்டு குப்பைகளை சேகரித்து அதனை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்கப்படுகின்றன. இதில் மக்கும் குப்பையை மறுசுழற்சி செய்யும் எந்திரங்கள் மூலம் உரமாக்கும் பணிகளுக்காக நகரில் சில இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

இதில் விருதுநகர் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள பழமை வாய்ந்த நகராட்சி சத்திரமும் மறுசுழற்சி மையத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. நகராட்சி சத்திரத்தில் விருதுநகர் மாவட்டம் தொடங்கும் போது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகமும், அதனை தொடர்ந்து போலீஸ்நிலையங்களும், இறுதியாக தற்காலிக தீயணைப்பு நிலையமும் இயங்கி வந்தது. தற்போது இந்த இடத்தில் குப்பைகளை பிரித்து மறுசுழற்சி செய்யும் மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த இடத்தில் அம்மா உணவகமும், சாலையோர உணவகங்களும் உள்ளன. மேலும் விருதுநகரின் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க 100 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட வேலாயுத ஊருணியும் மற்றும் குடியிருப்பு பகுதிகளும் அருகில் உள்ளன.

பொதுவாக குப்பைகளை பிரித்து மறுசுழற்சி செய்வது போன்ற பணிகள் நகருக்கு வெளியே பொதுமக்கள் பயன்படுத்தாத இடங்களில் தான் செய்யப்படும். ஆனால் நகர் பகுதிக்குள் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் குடியிருப்புகளுக்கு அருகில் இந்த பணிகளை செய்வதால் மிகுந்த பாதிப்பு ஏற்படும். எனவே இப்பகுதியில் மறுசுழற்சி மையம் அமைத்துள்ளதை தவிர்க்கப்பட வேண்டும்.

விருதுநகரில் எந்த நகராட்சியிலும் இல்லாத அளவிற்கு குப்பைகளை சேமிக்க 100 ஏக்கருக்கு மேல் மாத்திநாயக்கன்பட்டி ரோட்டில் இடம் உள்ளது. எனவே பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் சுகாதார சீர்கேட்டை தவிர்க்கும் வகையில் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள குப்பைகள் மறு சுழற்சி மையத்தை மாற்றி அமைக்க உத்தரவிட வேண்டும் என நகர்மக்கள் சார்பில் வேண்டுகிறேன். மேலும் நகராட்சி பகுதியில் வீடு, வீடாக துப்புரவு பணியாளர்கள் வந்து குப்பைகளை வாங்கி செல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 247 பணியாளர்கள் இருந்த இடத்தில் தற்போது 100-க்கும் குறைவான பணியாளர்களே உள்ளதால் வாரம் ஒருமுறை கூட குப்பைகளை வாங்க முடியாத நிலை நீடிக்கிறது. எனவே உடனடியாக குறைந்தபட்சம் 50 துப்புரவு பணியாளர்களை நியமிக்க விருதுநகர் நகராட்சிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்