திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை
வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி, திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.;
திருச்செந்தூர்,
வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி, திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
உதவி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
உடன்குடி அருகே செட்டியாபத்து சிவலூர் மேலத் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, உதவி கலெக்டர் தனப்பிரியாவிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
அந்த மனுவில், தங்கள் பகுதியில் 80 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகள் கட்டி வசித்து வருகிறோம். நாங்கள் வசிக்கும் இடமானது செட்டியாபத்து சிதம்பரேசுவரர் கோவிலுக்கு சொந்தமானது. நாங்கள் வசிக்கும் இடத்துக்கு பட்டா வழங்க கோரி, பல ஆண் டுகளாக அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வீட்டுமனை பட்டா வழங்க...
நாங்கள் 30 ஆண்டுகளாக வீட்டுத்தீர்வை வரி செலுத்தி வருகிறோம். ஆனாலும் எங்களுக்கு அரசின் இலவச வீடுகள் திட்டத்தில் வீடுகள் ஒதுக்கப்படவில்லை. இதனால் பெரும்பாலானவர்கள் குடிசை வீடுகளிலே வசித்து வருகின்றனர்.
சிவலூர் காலனி ஆதிதிராவிட மக்களுக்கு கோவில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, வீட்டுமனை நத்தமாக மாற்றப்பட்டு, 58 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டு, வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று எங்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். ஒரு மாதத்துக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லையெனில், எங்களது மின்னணு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைப்போம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.