தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் இருந்து 350 சிறப்பு பஸ்கள்; இன்று முதல் இயக்கப்படுகிறது

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் இருந்து இன்று(வியாழக்கிழமை) முதல் 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

Update: 2019-10-23 22:30 GMT
திருப்பூர்,

பின்னலாடை நிறுவனங்கள் நிறைந்த திருப்பூரில் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில மக்கள் அதிக அளவில் தங்கி தொழில் நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்று கொண்டாடுவது வழக்கம்.

இதனால் திருப்பூரில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள ஊர்களுக்கு தொழிலாளர்கள் செல்வார்கள். தொழிலாளர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் இருந்து 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இன்று(வியாழக்கிழமை) முதல் திருப்பூர் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் பகுதியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் இல்லாமல் பயணிகள் வரிசையாக நின்று பஸ்சில் ஏறி செல்வதற்காக புதிய பஸ் நிலையத்தின் உள்புறம் கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோல் பழைய பஸ் நிலையம் பகுதியிலும் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தென்மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய ஊர்களுக்கு அதிகமாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருச்சி மார்க்க வழித்தடங்களிலும் அதிக பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் வருகிற 27-ந் தேதி காலை வரை திருப்பூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

அதுபோல் சொந்த ஊரில் இருந்து திருப்பூர் நோக்கி வருபவர்களின் வசதிக்காக 28-ந் தேதி முதல் அந்த வார இறுதிவரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

புதிய பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடைபெறுவதால் இடநெருக்கடியை தவிர்க்கும் வகையில் தற்காலிக பஸ் நிலையங்கள் 2 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிதம்பரம், அறந்தாங்கி, வேளாங்கண்ணி, பட்டுக்கோட்டை செல்லும் பஸ்கள் அனைத்தும் புதிய பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து இன்று முதல் இயக்கப்படுகிறது.

அதுபோல் அவினாசி வழியாக கோவை, மேட்டுப்பாளையம், பெருமாநல்லூர் வழியாக ஈரோடு செல்லும் பஸ்கள் குமார் நகரில் உள்ள பழைய வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், கோவில்பட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில் செல்லும் பஸ்கள் இயக்கப்படுகிறது. பழைய பஸ் நிலையத்தில் இருந்து பல்லடம் வழியாக கோவை, ஊத்துக்குளி வழியாக ஈரோடு, சேலம் செல்லும் பஸ்கள் இயக்கப்படுகிறது.

திருப்பூரில் இருந்து சென்னை செல்லும் பயணிகள் வசதிக்காக நேற்று இரவு முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பழைய, புதிய பஸ் நிலையங்களில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள். பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ள ஊர்களுக்கு உடனடியாக கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்துள்ளனர். சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதை தொடர்ந்து பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் மற்றும் தற்காலிக பஸ் நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்