காயல்பட்டினத்தில் இளம்பெண் தற்கொலை: கணவர் உள்பட 3 பேருக்கு தலா 7 ஆண்டு ஜெயில் தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு
காயல்பட்டினத்தில் இளம்பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவர் உள்பட 3 பேருக்கு தலா 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
தூத்துக்குடி,
காயல்பட்டினத்தில் இளம்பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவர் உள்பட 3 பேருக்கு தலா 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
நகைக்கடை ஊழியர்
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பெரிய நெசவு தெருவை சேர்ந்தவர் முகமது ரபி. இவருடைய மகன் யூசுப் அலாவுதீன் (வயது 29). இவர் சென்னையில் நகைக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், நபோலாபெனாசிர் என்பவருக்கும் கடந்த 3-8-14 அன்று திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு பிறகு யூசுப் அலாவுதீனின் தாய் ரபிவுல் தெரப்ஜா பீவி (53), சகோதரி பாத்திமா முஜமிலா (30) ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு, நபோலா பெனாசிரை துன்புறுத்தி உள்ளனர். இதனை யூசுப் அலாவுதீன் தடுக்கவில்லை.
7 ஆண்டு ஜெயில்
இதில் மனம் உடைந்த நபோலா பெனாசிர் 17-6-15 அன்று வீட்டில் வைத்து உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் விசாரணை நடத்தி யூசுப் அலாவுதீன், ரபிவுல் தெரப்ஜா பீவி, பாத்திமா முஜமிலா ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். திருச்செந்தூர் உதவி கலெக்டர் தியாகராஜன் விசாரணை நடத்தினார்.
இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சி.குமார்சரவணன் குற்றம் சாட்டப்பட்ட யூசுப் அலாவுதீன், ரபிவுல் தெரப்ஜா பீவி, பாத்திமா முஜமிலா ஆகிய 3 பேருக்கும் தலா 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுபாஷினி ஆஜர் ஆனார்.