வடகர்நாடகத்தில் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பு கலெக்டர்களுடன் எடியூரப்பா ஆலோசனை நிவாரண பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள உத்தரவு

மழைவெள்ளத்தால் வடகர்நாடகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ள பாதிப்புகள் குறித்து கலெக்டர்களுடன் எடியூரப்பா காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார்.

Update: 2019-10-23 23:00 GMT
பெங்களூரு,

கடந்த ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் கர்நாடகத்தில் குறிப்பாக வட கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்தது.

மீண்டும் கனமழை

மேலும் மராட்டிய மாநிலம், கொய்னா அணையில் இருந்து அதிகளவில் தண்ணீரை திறந்துவிட்டதால் கிருஷ்ணா ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

அந்த பகுதிகளில் 90-க்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்தனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர். 7 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அதிக எண்ணிக்கையில் கால்நடைகள் செத்தன. இந்த நிலையில் அதே வட கர்நாடகத்தில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. கடந்த 4 நாட்களாக பெய்து வரும் மழையால், ஆறுகள், ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன.

கலெக்டர்களுடன் எடியூரப்பா ஆலோசனை

அலமட்டி அணையில் இருந்து கிருஷ்ணா ஆற்றில் சுமார் வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணா ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வசதிக்காக பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா உள்ளிட்ட மாவட்டங்களில் 12 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று பெங்களூருவில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது பேசிய எடியூரப்பா, “பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா உள்பட மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரண பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகளை செய்ய வேண்டும். அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு மக்களுக்கு உதவும் பணியை செய்ய வேண்டும். இதில் அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்“ என்று எச்சரிக்கை விடுத்தார்.

10 நிமிடங்களில்...

சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே எடியூரப்பா கலந்துரையாடினார். பின்னர் அவர், மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றார். அதைதொடர்ந்து, தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், மாவட்ட கலெக்டர்களுடன் கலந்துரையாடலை தொடர்ந்து நடத்தினார். இந்த கூட்டத்தில் மாநில அரசின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்