15 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது கர்நாடகத்தில் கனமழைக்கு 10 ஆயிரம் வீடுகள் சேதம் நிவாரணத்துக்கு நிதி உதவி வழங்க அரசு வேண்டுகோள்
கர்நாடகத்தில் கனமழையால் 15 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கனமழைக்கு 10 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கனமழையால் 15 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கனமழைக்கு 10 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. எனவே நிவாரண பணிகளை மேற்கொள்ள நிவாரணத்துக்கு நிதி உதவிகளை வழங்கும்படி கர்நாடக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
12 பேர் மரணம்
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில், அதாவது கடந்த ஆகஸ்டு மாதம் வட கர்நாடகத்தில் கனமழை கொட்டியது. மேலும் மராட்டிய மாநிலம் கொய்னா அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டதால், கிருஷ்ணா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 80-க்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்தனர். லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். அந்த பாதிப்பில் இருந்து வட கர்நாடக மக்கள் மெல்ல மெல்ல மீண்டு வந்த நிலையில், மீண்டும் அதே பகுதிகளில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது.
பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா, யாதகிரி, கதக், தார்வார், சித்ரதுர்கா, ராய்ச்சூர், பல்லாரி உள்ளிட்ட 15 வட கர்நாடக மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் மராட்டிய மாநிலம், கொய்னா அணையில் இருந்து அதிகளவில் தண்ணீரை கிருஷ்ணா ஆற்றில் திறந்து விட்டுள்ளது. இதனால் கிருஷ்ணா ஆற்றங்கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை கனமழைக்கு 12 பேர் மரணம் அடைந்தனர்.
போக்குவரத்து துண்டிப்பு
இந்த நிலையில் மராட்டியத்தில் கனமழை பெய்து வருவதால் யாதகிரியில் உள்ள நாராயணபுரா அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அந்த அணையில் இருந்து வினாடிக்கு 3.25 லட்சம் கனஅடி நீர் கிருஷ்ணா ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக லிங்கசுகூர்-சீலஹள்ளி பாலம் தண்ணீரில் மூழ்கிவிட்டது. அதே போல் தேவதுர்காவில் உள்ள ஹூவினஹெடகி பாலமும் தண்ணீரில் மூழ்கி இருக்கிறது. இதனால் அந்த சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.
கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பெலகாவி, யாதகிரி, ராய்ச்சூர் ஆகிய மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. கோகாக்கில் கனமழை பெய்து சாலையில் தண்ணீர் தேங்கியதால், பெலகாவி-கோகாக் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
15 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது
பல்லாரியில் உள்ள துங்கபத்ரா அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அந்த அணையில் இருந்து வினாடிக்கு 1.50 லட்சம் கனஅடி நீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டு உள்ளது. இதனால் பீமா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாவணகெரே மாவட்டத்தில் பெய்த கனமழையால், 12 ஆண்டுகளுக்கு பிறகு அங்குள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன.
மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு செல்லும் ரோட்டில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் விரைந்து வந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, அங்கு போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். வட கர்நாடகத்தில் 15 மாவட்டங்களில் மழைநீரில் தத்தளிக்கின்றன. பல்வேறு கிராமங்கள் துண்டிக்கப்பட்டு தீவு போல் காட்சி அளிக்கின்றன. கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் 10 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மந்திரிகள் பார்வையிட்டனர்
சித்ரதுர்கா மாவட்டத்தில் பெய்த கனமழைக்கு ஒசதுர்கா தாலுகா வேதாவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அருகில் இருந்த தென்னை மரங்கள் சாய்ந்து விழுந்தன. பாதிக்கப்பட்ட மக்களின் வசதிக்காக 12-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் மழைக்கு நேற்று ஒருவர் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இதன் மூலம் மழைக்கு பலியானோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மாநில அரசு நிவாரண பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகளை கவனிக்க மந்திரிகளின் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த குழுவில் இடம்பெற்றுள்ள மந்திரிகள் நேற்று முதல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகிறார்கள்.
நன்கொடை வழங்க வேண்டுகோள்
இந்த நிலையில் கர்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கர்நாடகத்தில் குறிப்பாக வட கர்நாடகத்தில் மீண்டும் கனமழை பெய்து பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் முன்வர வேண்டும்.
இதற்காக முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கலாம். விதான சவுதாவில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என்ற வங்கி கிளையில் உள்ள முதல்-மந்திரி நிவாரண நிதி இயற்கை பேரிடர் என்ற பெயரில் உள்ள 37887098605 என்ற வங்கி கணக்கு எண்ணில் நன்கொடையை செலுத்தலாம். நன்கொடை வழங்குபவர்கள் வருமான வரி விலக்கு பெற முடியும்“ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.