சத்துணவில் பூச்சி கிடந்ததாக புகார்: பள்ளிக்குழந்தைகளின் பெற்றோர் சாலை மறியல்
சத்துணவில் பூச்சி கிடந்ததாக எழுந்த புகார் காரணமாக பள்ளிக்குழந்தைகளின் பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
புஞ்சைபுளியம்பட்டி,
புஞ்சைபுளியம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதியைச்சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் பூச்சி கிடந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி குழந்தைகள் வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்கள்.
இதற்கிடையே நேற்று காலை பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட 50-க்கும் மேற்பட்ட பெற்றோர், சத்துணவு அமைப்பாளரிடம் உணவில் பூச்சி கிடந்தது பற்றி கேட்டார்கள். அதற்கு அவர் சரிவர பதில் கூறவில்லை என்று தெரியவருகிறது.
இதைத்தொடர்ந்து பெற்றோர்கள் பள்ளியின்் அருகே செல்லும் சத்தி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் அந்த வழியாக எந்த வாகனமும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல் பற்றிய தகவல் கிடைத்ததும், புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் மறியலில் ஈடுபட்டிருந்த பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இந்த பேச்சுவார்த்தையில் பவானிசாகர் தொடக்க கல்வி அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள். அப்போது அதிகாரிகள் இதுகுறித்து உரிய விசாரணை நடத்துவோம் என்றார்கள். அதை பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டு வீட்டுக்கு சென்றார்கள். இந்த சம்பவம் நேற்று புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.