செம்பூரில் மகள் கடத்தப்பட்டதால் தந்தை தற்கொலை: பிணத்துடன் திடீர் சாலை மறியல்; போலீஸ் தடியடி- பயங்கர வன்முறை

செம்பூரில் மகள் கடத்தப்பட்ட விரக்தியில் தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அவரது பிணத்துடன் திடீர் சாலை மறியல் நடந்தது.

Update: 2019-10-22 23:15 GMT
மும்பை, 

செம்பூரில் மகள் கடத்தப்பட்ட விரக்தியில் தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அவரது பிணத்துடன் திடீர் சாலை மறியல் நடந்தது. கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதில் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் 3 போலீசார் காயமடைந்தனர். 19 வாகனங்கள் நொறுக்கப்பட்டன.

தற்கொலை

மும்பை செம்பூர் நாக்கா அருகே தக்கர்பாபா காலனியை சேர்ந்தவர் பரசுராம்(வயது40). இவரது 17 வயது மகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டாள். இதுபற்றி அவர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் தனது மகளை யாரோ கடத்தி சென்றுவிட்டதாக புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

சில மாதங்கள் கடந்தும் போலீசார் அவரது மகளை கண்டுபிடிக்க வில்லை. இதுபற்றி பரசுராம் போலீசாரிடம் கேட்டபோது சரிவர பதில் அளிக்கவில்லை என தெரிகிறது.

இதனால் விரக்தி அடைந்த பரசுராம் கடந்த வாரம் திலக்நகர் ரெயில்நிலையத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

பிணத்துடன் சாலை மறியல்

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பரசுராமை தற்கொலைக்கு தூண்டியதாக வடலா ரெயில்வே போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

பிரேத பரிசோதனை முடிந்ததை தொடர்ந்து உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர். 17 வயது பெண் கடத்தல் சம்பவத்திலும், அவரது தந்தை தற்கொலை சம்பவத்திலும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்தனர். சமரசத்தை தொடர்ந்து நேற்று அவரது உடலை உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

அவரது உடலை தகனத்துக்காக நேற்று வீட்டில் இருந்து செம்பூரில் உள்ள மயானத்துக்கு எடுத்து சென்றனர். இதில் உறவினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

காணாமல் போன பரசுராமின் மகளை தேடாமல் பணியில் அலட்சியமாக இருந்ததாக போலீசார் மீது அவர்கள் குற்றம் சாட்டி கோஷம் எழுப்பினர். பரசுராம் தற்கொலைக்கு காரணமானவர்களை கைதுசெய்யவும் வலியுறுத்தினர். இந்த நிலையில் இறுதி ஊர்வலம் உமர்ஷி பாபா சவுக்கில் வந்தபோது திடீரென அவர்கள் போலீசாரை கண்டித்து பிணத்துடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தடியடி

இதனால் அந்த பகுதியில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லும் படி எச்சரித்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை.

இதனால் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்களில் சிலர் போலீசார் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கினர். இதில் 3 போலீசார் காயமடைந்தனர். மேலும் போலீஸ் வாகனங்களின் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் அந்த பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது.

பதற்றம்

நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். இதையடுத்து நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

மேலும் இந்த சம்பவத்தில் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக பரசுராமின் உறவினர்களிடம் போலீசார் உறுதிமொழி அளித்தனர். இதைத்தொடர்ந்து அவரது உடலை சுடுகாட்டிற்கு எடுத்து சென்று உறவினர்கள் அடக்கம் செய்தனர்.

இந்த பயங்கர வன்முறையில் போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கியதில் போலீஸ் வேன், டாக்சி, கார் உள்பட 4 வாகனங்களும், 3 ஆட்டோக்கள் மற்றும் 12 இரு சக்கர வாகனங்களும் சேதம் அடைந்தன.

மேலும் கல்வீச்சில் ஈடுபட்டதாக 22 பேரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் செம்பூரில் நேற்று பெரும் பதற்றம் ஏற்பட்டது.

மேலும் செய்திகள்