திருக்கனூர் அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தி நாற்று நடும் போராட்டம்

திருக்கனூர் அருகே சேறும் சகதியுமான சாலையை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.

Update: 2019-10-22 22:45 GMT
திருக்கனூர்,

திருக்கனூர் அருகே காட்டேரிக்குப்பத்துக்கு செல்லும் வகையில் குமராப்பாளையம் - தேத்தாம்பாக்கம் சாலை உள்ளது. இந்த சாலையோரம் பல ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு விவசாய பணிக்காக தினமும் விவசாயிகள் வந்து செல்கின்றனர். இப்பகுதியில் 2 தனியார் தொழிற்சாலைகளும் உள்ளனர். இந்த தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களும் குமராப்பாளையம் - தேத்தாம்பாக்கம் சாலை வழியாக தினசரி சென்று வருகின்றனர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த சாலை போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதன் வழியாக விவசாய நிலங்களுக்கு விளைபொருட்களை எடுத்துச்செல்லவும், அறுவடை செய்த விளைபொருட்களை வீட்டுக்கு கொண்டு வரவும் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். இந்த சாலையை சீரமைக்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும், சரிசெய்யப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையால் குண்டும் குழியுமான சாலை சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதில் நடந்து செல்வதே சாகச பயணமாக உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சேற்றில் வழுக்கி விழுந்து காயமடையும் நிலை உள்ளது.

இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் குமராப்பாளையம், தேத்தாம்பாக்கம் கிராமங்களை சேர்ந்த மக்கள் நேற்று காலை சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைவில் இந்த சாலையை சரி செய்யவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி சாலைமறியலில் ஈடுபடுவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்