உ.பி.யில் இந்து அமைப்பு பிரமுகர் கொலை வழக்கில் ‘சிமி’ இயக்க பயங்கரவாதி கைது உப்பள்ளி ரெயில் நிலைய குண்டு வெடிப்பில் தொடர்பா? போலீஸ் விசாரணை
உ.பி.யில் இந்து அமைப்பு பிரமுகர் கொலை வழக்கில் ‘சிமி’ இயக்க பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு,
உ.பி.யில் இந்து அமைப்பு பிரமுகர் கொலை வழக்கில் ‘சிமி’ இயக்க பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உப்பள்ளி ரெயில் நிலைய குண்டுவெடிப்பில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
‘டிபன் பாக்ஸ்’ குண்டுவெடிப்பு
கர்நாடக மாநிலம் உப்பள்ளி ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் ‘டிபன் பாக்ஸ்’ குண்டு வெடித்து சிதறியது. இதில், ரெயில் நிலையத்தில் கேண்டீனில் வேலை பார்த்து வரும் ஹுசைன் சாப் என்கிற வாலிபரின் கை துண்டிக்கப்பட்டது. இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் 9 ‘டிபன் பாக்ஸ்’ குண்டுகள் செயலிழக்க செய்யப்பட்டன. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் ‘டிபன் பாக்ஸ்’ குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய மர்மநபர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோலாப்பூர் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த ‘டிபன் பாக்ஸ்’ குண்டுகள் ஆந்திராவில் இருந்து கோலாப்பூருக்கு கொண்டு செல்ல முயற்சி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் நேற்று உப்பள்ளி ரெயில் நிலைய குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக உப்பள்ளி ரெயில்வேயில் ஊழியராக வேலை பார்த்து வரும் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
தொடர்பு இல்லை
விசாரணையில், அவர் பெயர் முகமது ஜாபர் சாதிக் என்பதும், இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சிமி’ என்கிற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் கொலை செய்யப்பட்ட இந்து அமைப்பு பிரமுகர் கமலேஷ் திவாரி கொலையில் முகமது ஜாபர் சாதிக்கிற்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கர்நாடக போலீசார், இந்து அமைப்பு பிரமுகர் கமலேஷ் திவாரி கொலை வழக்கு பற்றி விசாரித்து வரும் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்கள், முகமது ஜாபர் சாதிக்கை உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து அங்கிருந்து அழைத்து சென்றனர். இதுகுறித்து கர்நாடக போலீசார் கூறுகையில், உப்பள்ளி ரெயில் நிலைய குண்டு வெடிப்பு வழக்கில், முகமது ஜாபர் சாதிக்கிற்கு எந்த தொடர்பும் இல்லை. இந்து அமைப்பு பிரமுகர் கமலேஷ் திவாரி கொலை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தனர்.