கும்பகோணம் அருகே, பஸ்-லாரி மோதல்; 24 பேர் படுகாயம்

கும்பகோணம் அருகே பஸ்-லாரி மோதியதில் 24 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-10-22 22:15 GMT
கும்பகோணம், 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து நேற்று காலை தனியார் பஸ் ஒன்று கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை கருப்பூர் பகுதியை சேர்ந்த கண்ணன்(வயது27) என்பவர் ஓட்டினார். காலை நேரம் என்பதால் பஸ்சில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயணம் செய்தனர்.கும்பகோணம் அருகே மாடாகுடி பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி நோக்கி வந்து கொண்டிருந்த லாரியும், பஸ்சும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பஸ் மற்றும் லாரியின் முன்பகுதி நொறுங்கி சேதம் அடைந்தது.

பஸ்சில் பயணம் செய்த ஆலங்குடியை சேர்ந்த ராஜா (43), லட்சுமி (51), திருத்துறைப்பூண்டியை சேர்ந்த ராமன் (60), மணல்மேட்டை சேர்ந்த நம்பியார் (50), விழுப்புரத்தை சேர்ந்த ரவி (58), வலங்கைமானை சேர்ந்த மல்லிகா (48), சேலத்தை சேர்ந்த பிரகா‌‌ஷ் (24), தில்லையம்பூரை சேர்ந்த பள்ளி மாணவர் ஆகா‌‌ஷ் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட 24 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டனர். இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்