குடியாத்தம் அருகே, வைரஸ் காய்ச்சலுக்கு பள்ளி மாணவி சாவு

குடியாத்தம் அருகே வைரஸ் காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தாள். அவளுடைய அக்காள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறாள்.

Update: 2019-10-22 23:00 GMT
குடியாத்தம், 

குடியாத்தம் ஒன்றியம் அக்ராவரம் ஊராட்சி மேல்ரங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் அறிவரசன். இவருடைய மனைவி சங்கீதா. இருவரும் கூலித் தொழிலாளர்கள். இவர்களுடைய மகள்கள் புவியரசி (வயது 13), திவ்யா (11). குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிதியுதவி பள்ளியில் புவியரசி 8-ம் வகுப்பும், திவ்யா 7-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக புவியரசியும், திவ்யாவும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதனையடுத்து பெற்றோர், 2 மகள்களையும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர். காய்ச்சல் அதிகமாகவே குடியாத்தம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி திவ்யா பரிதாபமாக உயிரிழந்தாள். வைரஸ் காய்ச்சலால் திவ்யா இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். புவியரசி தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறாள்.

இதுதொடர்பாக கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில், குடியாத்தம் தாசில்தார் டி.பி.சாந்தி, மாவட்ட பூச்சியியல் வல்லுனர் காமராஜ், நகராட்சி ஆணையாளர் எச்.ரமே‌‌ஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் ரமே‌‌ஷ்குமார், டாக்டர்கள் விமல்குமார், சிந்து, சவுமியா உள்பட 20-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் மற்றும் சுகாதார பணியாளர்கள் மாணவியின் கிராமத்திற்கு சென்று சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.

அதுமட்டுமல்லாமல் அப்பகுதியில் முகாமிட்டு பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவிகள் பயின்ற பள்ளியிலும் சுகாதார பணிகளை மேற்கொண்டு மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர்.

மேலும் செய்திகள்