சிவகிரியில் நடந்த சிலைகள் உடைப்பு சம்பவத்தில் ஒருவர் கைது; மேலும் 6 பேருக்கு வலைவீச்சு

சிவகிரியில் நடந்த சிலைகள் உடைப்பு சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 6 பேரை வலைவீசி தேடி வருகிறார் கள்.;

Update: 2019-10-22 23:00 GMT
சிவகிரி,

சிவகிரி தலையநல்லூரில் புகழ்பெற்ற பொன்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வகையறாவான காளியண்ணன் கோவில் சிவகிரி-கொடுமுடி ரோட்டில் தொப்பபாளையம் என்ற இடத்தில் உள்ளது.

இந்த கோவிலில் சிலை அமைப்பது தொடர்பாக இரு சமூகத்தினர்இடையே பிரச்சினை ஏற்பட்டது. ஒரு தரப்பினர் புதிய சிலை அமைக்கவேண்டும் என்றும்,மற்றொரு தரப்பினர்அமைக்க கூடாது என்றும் தகராறில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வழக்கும் ஈரோடு கோர்ட்டில் நடந்து வருகிறது.

இதற்கிடையே ஒரு தரப்பினர் கோவிலில் காளியண்ணனுக்கு புதியசிலை அமைத்தனர், இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலை மர்ம நபர்கள் 7 பேர் தலையில் ஹெல்மெட் அணிந்தபடி கோவிலுக்குள் நுழைந்து சம்மட்டியால் சிலைகளை அடித்து உடைத்துவிட்டு சென்றார்கள்.

இந்தநிலையில் சிலையை உடைத்தவர்களை கைது செய்யக்கோரி நேற்று முன்தினம் சிவகிரியில் கடையடைப்பு, சாலை மறியல் போராட்டம் என பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தார்கள்.

கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியபோது, சிவகிரி அருகே உள்ள கோட்டைகாட்டுவலசு என்ற கிராமத்தை சேர்ந்த ரவி (வயது 43) என்பவர் மேல் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் போலீசார் அவரிடம் விசாரணை நடத்த சென்றார்கள். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார்.

இதற்கிடையே பாரப்பாளையம் பஸ்நிறுத்தத்தில் வெளியூர் தப்பி செல்வதற்காக நின்றுகொண்டு இருந்த ரவியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது சிலைகள் உடைத்ததில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ரவியை போலீசார் கைது செய்தார்கள். பின்னர் கொடுமுடி நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்கள்.

ரவி கொடுத்த தகவலின் பேரில் இந்த விவகாரத்தில் மேலும் 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்