திருத்துறைப்பூண்டியில் அரசு வக்கீல் வீட்டில் 48 பவுன் நகைகள்-ரூ.60 ஆயிரம் கொள்ளை
திருத்துறைப்பூண்டியில், அரசு வக்கீல் வீட்டில் 48 பவுன் நகைகள் மற்றும் ரூ.60 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
திருத்துறைப்பூண்டி,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒருங்கிணைந்த கோர்ட்டில் அரசு குற்றப்பிரிவு வக்கீலாக பணிபுரிந்து வருபவர் சர்மிளி பானு(வயது 38). இவருடைய கணவர் ஜாகீர் உசேன்(45). இவர், திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். கணவன்-மனைவி இருவரும் திருத்துறைப்பூண்டி-நாகை மெயின் ரோடு கிழக்கு கடற்கரை சாலை தோப்படித்தெருவில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் தங்கள் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருச்சிக்கு சென்று இருந்தனர். பின்னர் அங்கிருந்து நேற்று இரவு வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்க முயற்சி செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு சர்மிளி பானு தகவல் தெரிவித்தார்.
இந்த தகவலின் பேரில் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர் தேவதாஸ் ஆகியோர் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
கணவன்-மனைவி இருவரும் வெளியூர் சென்று இருப்பதை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் அந்த வீட்டுக்கு கொள்ளையடிப்பதற்காக வந்து உள்ளனர். வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே செல்ல முயன்று உள்ளனர். அது முடியாததால் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று அங்கு இருந்த இரும்பினால் ஆன 3 பீரோக்களை உடைத்து அதில் இருந்த 48 பவுன் நகைகள் மற்றும் விவசாய பணிகளுக்காக வைத்திருந்த ரூ.60 ஆயிரம் மற்றும் மடிக்கணிணி உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து சென்று விட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து திருவாரூரில் இருந்து போலீஸ் மோப்ப நாய் ‘மெர்சி’ வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்று விட்டது. மேலும் திருவாரூரில் இருந்து சிறப்பு கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்தனர்.
இந்த கொள்ளை தொடர்பாக சர்மிளிபானு அளித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.