தஞ்சையில், துணிகர சம்பவம்: டாக்டர் தம்பதி வீட்டில் 10 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள் கொள்ளை
தஞ்சையில், டாக்டர் தம்பதி வீட்டில் 10 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் வீட்டில் நிறுத்தி இருந்த சொகுசு காரையும் எடுத்துச் சென்று விட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
தஞ்சாவூர்,
தஞ்சை புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே உள்ள நெய்தல் நகரை சேர்ந்தவர் முருகவேல். டாக்டரான இவர,் அரசு மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்று விட்டார். இவருடைய மனைவி சாந்தி. இவர் திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மகள் தர்ஷனா சென்னையில் படித்து வருகிறார்.
சம்பவத்தன்று முருகவேல், ஒரு வாடகை காரை எடுத்துக்கொண்டு திருச்சியில் உள்ள மனைவியை அழைத்துக்கொண்டு சென்னையில் உள்ள மகளை பார்க்க சென்றார். பின்னர் அவர் திருச்சி வந்து மனைவியை இறக்கி விட்டு விட்டு தஞ்சையில் உள்ள வீட்டிற்கு நேற்று அதிகாலை 3 மணிக்கு வந்தார்.
அப்போது வீட்டின் காம்பவுண்ட் சுவர் கேட் உடைக்கப்பட்டு, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சொகுசு காரை காணாதது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு இருந்தது. அவைகளில் வைத்து இருந்த ரூ.15 ஆயிரம், 10 பவுன் நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளிப்பொருட்கள் ஆகியவற்றை காணவில்லை.
மர்ம நபர்கள் வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து பூட்டை உடைத்து தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.
நகைகள், வெள்ளி பொருட்கள், பணத்ைத கொள்ளையடித்த மர்ம நபர்கள் வீட்டில் நிறுத்தி வைத்து இருந்த சொகுசு காரையும் விட்டு வைக்கவில்லை. அந்த காரையும் எடுத்துச்சென்று விட்டனர். அந்த காரின் மதிப்பு மட்டும் ரூ.14 லட்சம் ஆகும்.
இது குறித்து முருகவேல், தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதே போல் தஞ்சை கீழவாசல் டபீர்குளம் சாலையில் உள்ள ஒரு வீட்டிலும் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அப்போது அக்கம், பக்கத்தினர் சத்தம் கேட்டு அங்கு வந்ததால் மர்ம நபர்கள் இரும்பு கம்பி உள்ளிட்டவற்றை அங்கேயே போட்டு விட்டு தப்பிச்சென்று விட்டனர்.
இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.