வீரவணக்க நாள்: வீரர்களுக்கு 21 குண்டுகள் முழங்க மலர்வளையம் வைத்து அஞ்சலி
பாதுகாப்பு பணியில் உயிரிழந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் 21 குண்டுகள் முழங்க கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
ராமநாதபுரம்,
ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த வீரர்களின் நினைவாக வீர வணக்கம் செலுத்தும் வகையில் நீத்தார் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் வீரவணக்க நாள் ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், டி.ஐ.ஜி. ரூபோஸ்குமார் மீனா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா ஆகியோர் கலந்து கொண்டு நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பணியின் போது உயிரிழந்தவர்களின் நினைவாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் 21 குண்டுகள் முழங்க நினைவுத்தூணில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. விழாவையொட்டி மாவட்டத்தில் பள்ளிகளில் நடைபெற்ற பேச்சு போட்டி, கட்டுரை போட்டி போன்றவற்றில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் வீரராகவராவ் மற்றும் டி.ஐ.ஜி.ரூபேஸ்குமார் மீனா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா பேசியதாவது:- கடந்த 1959-ம் ஆண்டு லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 10 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த வீரர்களின் தியாகத்தினை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ந்தேதி நீத்தார் நினைவு தினம் எனும் வீர வணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நினைவு தினத்தில் கடந்த ஒரு ஆண்டில் பணியின்போது உயிரிழக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்படும். இவ்வாறு கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி முதல் கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி வரை இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு பணியின் போது உயிரிழந்த 292 வீரர்களின் நினைவாக இந்த நீத்தார் நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கடற்படை கமாண்டர் ஷினோத் கார்த்திகேயன், கடலோர காவல்படை கமாண்டர் வெங்கடேசன், துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்ரகு மற்றும் ஆயுதப்படை அதிகாரிகள், ஊர்க்காவல் படை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மோகன் நன்றி கூறினார்.