பயிர்களை சேதப்படுத்துவதால் அவதி: காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மனு
பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.
கோவை,
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு துணை ஆணையர் (கலால்) கலைவாணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தலைமையில் துணை தலைவர் பெரியசாமி முன்னிலையில் விவசாயிகள் கைகளில் வாழை கன்றுகள், மரவள்ளி கிழங்கு உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின்னர் அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கோவை மாவட்டத்தில் விவசாய பயிர்களான வாழை, மக்காச்சோளம், மரவள்ளி கிழங்கு, நிலக்கடலை, தென்னை, காய்கறிகள் போன்றவற்றை பயிரிட்டு வருகிறோம். எங்களுக்கு விவசாயத்தை விட்டால் வேறு தொழில் கிடையாது. இந்த விவசாய பயிர்களை காட்டு விலங்குகள் அதிக அளவில் சேதத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக மரநாய், காட்டுப் பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து வாழைக்கன்றுகள், மரவள்ளிக்கிழக்கு, நிலக்கடலை போன்ற விவசாய பயிர்களை தின்றும், சேதப்படுத்தியும் வருகின்றன.
இதில் ஆனைமலை, சேத்துமடை, ஆழியார், காளியாபுரம், செம்மனாபதி, கிழவன்புதுார், தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, மத்தவராயபுரம், கரடிமடை தாளியூர், சிறுமுகை, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், மத்தம்பாளையம், பிளிச்சி பஞ்சாயத்து கிழக்கு போன்ற பகுதிகளில் காட்டுப்பன்றிகள் பயிர்களை அதிக அளவில் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு மானிய விலையில் சோலார் மின்வேலி அமைக்க அரசு வழிவகை செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. அதில் 95 சதவீதம் விசைத்தறிகள் கூலி அடிப்படையில் இயக்கி வருகிறோம். எங்கள் விசைத்தறி தொழிலுக்கு கூலி உயர்வு பெற்று 6 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடந்த காலங்களில் கடுமையாக மின் கட்டணம் உயர்ந்து உள்ளது. இதுதவிர எங்கள் விசைத்தறி தொழிலுக்கு தேவையான உதிரி பாகங்கள் 50 சதவீதத்துக்கும்மேல் விலை உயர்ந்து உள்ளது. இதனால் தொழில் செய்ய இயலாத நிலையில் இருந்து வருகிறோம். எனவே தொழிலாளா்களுக்கு கடந்த 2014-ம் ஆண்டு ரக வாரியாக கொடுக்கப்பட்ட ஒப்பந்த கூலியிலிருந்து 90 சதவீதம் கூலி உயர்வு வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கோவை தெற்கு தொகுதி அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. தலைமையில் அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-
கோவையில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இந்த தொழிலை நம்பி 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே இந்த தொழிலுக்கு எதிராக தனியார் நிறுவனங்கள் கால்பதித்து வருவதால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
தற்போது டூவீலர் டாக்சி என்ற பெயரில் கார்ப்பரேட் கம்பெனிகள் எந்தவித அனுமதியும் இல்லாமல் வாடகைக்கு ஆட்களை ஏற்றி செல்கின்றனர். இதனால் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேலும் பாதிக்கும் வகையில் உள்ளது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தது.