திருவண்ணாமலையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.5 லட்சம் நகை, பணம் கொள்ளை

திருவண்ணாமலையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.5 லட்சம் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

Update: 2019-10-21 22:45 GMT
திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை வேங்கிக்கால் புதூர் அண்ணாமலையார் தெருவை சேர்ந்தவர் பழனி (வயது 55), ரியல் எஸ்டேட் அதிபர். அவருடைய மனைவி சாந்தி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் பழனி சொந்த வேலை காரணமாக திருவண்ணாமலைக்கு சென்று இருந்தார். அவருடைய மனைவி சாந்தி அங்குள்ள மருத்துவமனைக்கு சென்றதாக தெரிகிறது. இவர்கள் வீட்டில் இல்லாத போது பழனி வீட்டின் முன்பு கார் ஒன்று இருந்து உள்ளது. அதனை அக்கம் பக்கத்தினர் பார்த்து உள்ளனர்.

மதியம் 12 மணி அளவில் மருத்துவமனையில் இருந்து சாந்தி வீட்டிற்கு வந்த போது, அவரது வீட்டில் இருந்து ஒருவர் பக்கத்து வீட்டு காம்பவுண்டு சுவரை ஏறி குதித்து காரில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த சாந்தி வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோக்கள் திறக்கப்பட்டு அதில் இருந்த ரூ.3 லட்சத்து 85 ஆயிரம் ரொக்கம் மற்றும் 4½ பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கொள்ளைபோன பணம் மற்றும் நகையின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் ஆகும்.

இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்