மஞ்சூர் பகுதியில் தொடர் மழை: குந்தா அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு
மஞ்சூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் குந்தா அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.
மஞ்சூர்,
நீலகிரி மாவட்டத்தில் 13 நீர்மின் நிலையங்கள் உள்ளது. அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா பைக்காரா, போர்த்திமந்து உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் மூலம் இந்த நீர் மின் நிலையங்கள் இயக்கப்பட்டு 833.65 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் மொத்த மின் உற்பத்தியில் 10 சதவீதம் மின்சார உற்பத்தி நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின்நிலைங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டு தொடக்கத்தில் சில மாதங்கள் போதிய மழை பெய்யாததால் அணைகளில் நீர் வரத்து மிகவும் குறைவாக காணப்பட்டது. பெரும்பாலான அணைகளில் இருப்பில் உள்ள நீரை கொண்டே மின்நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இ்ந்தநிலையில் பருவ மழை தொடங்கியதால் கடந்த 2 மாதங்களாக மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. குறிப்பாக நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை கொட்டியது. இந்த மழையால் மாவட்டம் முழுவதும் உள்ள ஆறுகள், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் தேக்கங்கள் அனைத்தும் நிரம்பியது.
குறிப்பாக மின்சார உற்பத்திக்கு முக்கிய ஆதாரமாக உள்ள அணைகள் அனைத்திலும் நீர்மட்டம் பெருமளவு உயர்ந்தது. கடந்த மாதம் தொடர்ந்து பெய்த கனமழையால் அப்பர்பவானி, குந்தா, பைக்காரா, கிளன்மார்கன், போர்த்திமந்து உள்ளிட்ட பெரும்பாலான அணைகள் திறந்துவிடப்பட்டது.
இந்தநிலையில் கடந்த ஒரு வார காலமாக மஞ்சூர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அப்பர் பவானி, அவலாஞ்சி அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால் கடந்த வாரம் அப்பர்பவானி, அவலாஞ்சி, குந்தா, கெத்தை அணைகள் திறந்துவிடப் பட்டன.
கடந்த 4 நாட்களாக குறிப்பாக அப்பர் பவானி, அவலாஞ்சி பகுதிகளில் மழையளவு குறைந்ததால் அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது நிறுத்தப்பட்டது. ஆனால் கடந்த 3 நாட்களாக மஞ்சூர் பகுதிகளில் தொடர்ந்து இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் 89 கன அடி உயரம் கொண்ட குந்தா அணை அதன் முழுக்கொள்ளளவை மீண்டும் எட்டியது. இதனால் அணையில் இருந்து நேற்று காலை முதல் வினாடிக்கு 1,016 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. அதனால் அணையில் இருந்து தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது.