சிறைகைதியான எம்.எல்.ஏ.வை நண்பரின் வீட்டுக்கு அழைத்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிநீக்கம் 3 போலீசாரும் பணி இடைநீக்கம்

ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த எம்.எல்.ஏ.வை சட்டவிரோதமாக நண்பரின் வீட்டுக்கு அழைத்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் பணிநீக்கம் செய்யப்பட்டார். 3 போலீசார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2019-10-20 23:35 GMT
மும்பை,

சோலாப்பூரில் உள்ள மாகோல் தொகுதி எம்.எல்.ஏ ரமேஷ் கதம். இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர் அன்னபாவ் சாதே மேம்பாட்டு கழகத்தின் தலைவராக இருந்த போது ரூ.150 கோடி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டு தானே சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சிகிச்சைக்காக ரமேஷ் கதமை ஜே.ஜே. ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற போலீசார், பின்னர் அவரை தானே சிறைக்கு அழைத்து சென்றனா். அப்போது ரமேஷ் கதமுக்கு பாதுகாப்புக்கு சென்ற போலீசார் அவரை சட்டவிரோதமாக கோட்பந்தர் சாலையில் உள்ள அவரது நண்பர் ராஜூ காரே என்பவரின் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த தானே போலீசார் அங்கு சென்றனர். அவர்கள் வீட்டில் இருந்து ரூ.53 லட்சத்தை பறிமுதல் செய்தனர். மேலும் பணம் வைத்திருந்த ராஜூ காரேவை கைது செய்தனர். கைதியான எம்.எல்.ஏ. ரமேஷ் கதமை நண்பர் வீட்டுக்கு அழைத்து சென்ற விவகாரம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரோகிதாஸ் பவார் மற்றும் 3 போலீசார் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது.

இந்தநிலையில் நேற்று கைதியை சட்டவிரோதமாக நண்பர் வீட்டுக்கு அழைத்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் ரோகிதாஸ் பவார் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டாா். மேலும் போலீசார் தத்தா சவான், திலீப் கட்டாரே, உத்தம் காம்ளே ஆகிய 3 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்