படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் - கூடுதல் பஸ் விட கோரிக்கை

பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்கின்றனர். இதை தவிர்க்க கூடுதல் பஸ்கள் விட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-10-20 22:30 GMT
பாகூர், 

விழுப்புரத்தில் இருந்து மதகடிப்பட்டு, பாக்கம் கூட்டுரோடு, குருவிநத்தம், பாகூர் உள்பட சுற்றுப்புற கிராம பகுதிகளுக்கு அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை வேளைகளில் நெரிசல் மிகுதியாக உள்ளது. இதனால் பயணிகள் ஆபத்தான பயணம் மேற்கொள்ள நேரிடுகிறது.

இந்த வழித்தடங்களில் குறைவான எண்ணிக்கையில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பஸ்கள் இயக்கப்படுவதால், கூட்ட நெரிசலை பொருட்படுத்தாமல் பயணிகள் ஏறுகின்றனர். கூட்ட நெரிசலால் இளைஞர்கள், மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டும், பஸ்களின் மேற்கூரைகள் மீது ஏறியும் பயணிக்கின்றனர்.

சில பஸ்கள் பாரம் தாங்காமல் ஒரு பக்கமாக சாய்ந்த நிலையில் செல்கின்றன. இதனால் விபத்து ஏற்பட்டு உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் பிக்பாக்கெட் மற்றும் திருட்டுகளில் ஈடுபட்டு கைவரிசை காட்டுகின்றனர். கூட்ட நெரிசலில் ஆபத்தான பயணம் மேற்கொள்வதுடன் பொருட்களை இழந்து பரிதவிக்கும் நிலைக்கு பொதுமக்கள் ஆளாகின்றனர்.

இதனைத் தவிர்க்கும் வகையில் பாகூர் சுற்றுப்புற கிராமங்களுக்கு அரசு, தனியார் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்