காமராஜ் நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற அ.தி.மு.க.வினர் கைது
காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட கவிக்குயில் நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற அ.தி.மு.க. பிரமுகர்கள் 5 பேரை தேர்தல் அதிகாரிகள் கைது செய்தனர்.
புதுச்சேரி,
புதுவை காமராஜ் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜான்குமார், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன், மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிசெல்வம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரவீனா உள்பட 9 பேர் களத்தில் உள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக கட்சி தலைவர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.
காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் நேர்மையாகவும், அமைதியான முறையில் நடக்கவும், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள், மதுபானங்கள் போன்றவற்றை வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் துறை அதிகாரிகள், போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக மாநில எல்லையில் தடுப்புகள் அமைத்து வாகனங்களை தீவிர சோதனைக்கு பின்னரே அனுப்பி வைக்கின்றனர்.
இந்த நிலையில் தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவு பெற்றதால் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்குவதற்கு வாய்ப்புள்ளதாக கருதி காமராஜ் நகர் தொகுதியை சுற்றியும், முக்கிய சாலைகளிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு தெருமுனையிலும் தாசில்தார், துணை தாசில்தார் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் நிறுத்தப்பட்டு சோதனை செய்தனர். முக்கிய இடங்களில் போலீசாரும், தேர்தல் அதிகாரிகளும் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட கவிக் குயில் நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாக தேர்தல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து சென்று பார்த்தபோது 5 பேர் சுற்றி வந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து சோதனை செய்தனர்.
அவர்களிடம் ஒரு லட்சத்து ஆயிரத்து 820 ரூபாய் இருந்தது. மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் அ.தி.மு.க.வினர் என்பதும்; வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதும் தெரியவந்தது. அதனைதொடர்ந்து அவர்கள் 5 பேர் மீதும் தேர்தல் விதிகளின்படி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட ரெயின்போ நகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் 250 வீடுகளுக்கு இலவச கேபிள் இணைப்பு வழங்கும் பணியில் சிலர் ஈடுபட்டனர். இதனை அறிந்த தேர்தல் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
அதனையடுத்து கேபிள் நிறுவனத்தை சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனை அறிந்த அவர்கள் 3 பேரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை அதிகாரிகள் தேடிவருகின்றனர்.