இந்துக்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க கூடாது என நான் சொல்லவில்லை சித்தராமையா பேட்டி

இந்துக்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கூடாது என நான் சொல்லவில்லை என சித்த ராமையா கூறினார்.

Update: 2019-10-20 23:05 GMT
மைசூரு,

முன்னாள் முதல்-மந்திரியும், தற்போது சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா மைசூரு டவுன் ராமகிருஷ்ணா நகரில் உள்ள தனது வீட்டில் நேற்று நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்துக்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டாம் என்று நான் கூறவில்லை. மாறாக இந்து மதத்தின் பெயரில் வன்முறை மற்றும் கலவரத்தை தூண்டுபவர்களுக்குத்தான் பாரத ரத்னா விருது வழங்க வேண்டாம் என்று நான் கூறியிருக்கிறேன். வீர்சாவர்க்கர், மகாத்மா காந்தி கொலை வழக்கில் தொடர்புடையவர். அதனால்தான் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டாம் என்று கூறினேன்.

அவருக்கு பதிலாக கடந்த ஆண்டு மரணம் அடைந்த துமகூரு சித்தகங்கா மடத்தின் மடாதிபதி சிவக்குமாரசுவாமிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். இதைத்தான் நான் வலியுறுத்தி வருகிறேன். இதே கருத்தை நான் மத்திய அரசிடமும் வலியுறுத்தி வருகிறேன். இந்துக்களுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க கூடாது என்று நான் சொல்லவில்லை. நானும் இந்து மதத்தை சேர்ந்தவன்தான். வீர்சாவர்க்கர் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தியதால் பா.ஜனதாவினர் எனக்கு எதிராக பேசி வருகிறார்கள்.

மந்திரி சி.டி.ரவி என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. நான் எப்போதும் உண்மையைத்தான் சொல்வேன். வீர்சாவர்க்கர் ஒரு மதவாதி. இந்து மதத்தை வளர்த்தவர் என்ற காரணத்திற்காக அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது. ஆனால் அவர் மகாத்மா காந்தி கொலை வழக்கில் குற்றவாளி ஆவார்.

முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு சொந்தமாக முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை. அவருடைய உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டன. பா.ஜனதா மேலிடத்தில் எடியூரப்பாவுக்கு மதிப்பு, மரியாதை இல்லை. எல்லா முடிவையும் மோடியும், அமித்ஷாவும் தான் எடுக்கிறார்கள். அவர்கள் எடுக்கும் முடிவைத்தான் எடியூரப்பா அமல்படுத்துகிறார். எல்லோருக்கும் சமநிலை, சம வாய்ப்பு, சம உரிமை வழங்கப்பட வேண்டிதான் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ஆனால் அந்த அறிக்கையை அமல்படுத்துவதற்குள் காங்கிரஸ் ஆட்சி முடிந்துவிட்டது. சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்தாவிட்டால் தலித் மக்கள், சிறுபான்மையினர், கிறிஸ்தவர்கள் மற்றும் பின்தங்கிய வர்க்கத்தினரின் வளர்ச்சி முற்றிலும் முடக்கி வைக்கப் படும். இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்