அரசு ஆஸ்பத்திரி, சுகாதார நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு
மாவட்டத்தில் உள்ள அரசு சுகாதார நிலையங்களிலும், அரசு ஆஸ்பத்திரிகளிலும் மத்திய சுகாதாரத்துறை குழுவினர் ஆய்வு மேற்கொண்டதோடு கிராமப்புற மக்களிடமும் மத்திய அரசின் சுகாதார திட்டங்கள் குறித்து கேட்டறிந்தனர்.
விருதுநகர்,
மத்திய அரசின் சுகாதாரத்துறை தமிழகத்தில் மத்திய அரசின் சுகாதார திட்டங்கள் மற்றும் பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் எந்த அளவிற்கு செயல்படுத்தப்படுகிறது என்றும் மக்கள் எந்த அளவிற்கு பயனடைந்துள்ளார்கள் என்றும் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டு நடப்பு ஆண்டில் விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களை தேர்வு செய்துள்ளனர்.
இதற்காக விருதுநகர் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட மத்திய சுகாதாரத்துறையை சேர்ந்த அதிகாரிகள் டாக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் 8 பேர் கொண்ட நிபுணர் குழு விருதுநகர் வந்துள்ளது. இவர்களுக்கு உதவியாக மாநில சுகாதாரத்துறையை சேர்ந்த 8 மருத்துவ நிபுணர்களும் வந்துள்ளனர்.
இந்த மருத்துவக் குழுவினர் விருதுநகர், அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிகளிலும் குலசேகரநல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஆய்வு மேற்கொண்டனர். அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நோயாளிகள் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என புகார் கூறியதோடு ஆஸ்பத்திரியில் உள்கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் இல்லை என்றும் புகார் தெரிவித்தனர். இதே போன்று விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியிலும் ஒவ்வொரு சிகிச்சை பிரிவிற்கும் இக்குழுவினர் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியான விருதுநகர் ஆஸ்பத்திரியில் உள்கட்டமைப்பு வசதிகளை பற்றியும் ஆஸ்பத்திரியில் உள்ள அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
மேலும் கிராமப்புறங்களில் 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் மத்திய அரசின் சுகாதார திட்டங்கள் பற்றி எந்த அளவிற்கு அவர்கள் தெரிந்து வைத்துள்ளார்கள் என்பதை அறிவதற்காக அவர்களிடம் கருத்து கேட்டனர். மேலும் அவர்களுக்கு மத்திய அரசின் சுகாதார திட்டங்கள் பற்றியும் பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் அவர்கள் அறிவுறுத்தினர். ஆரம்ப சுகாதார நிலையங்களை பொறுத்தமட்டில் இந்த மத்திய குழுவினர் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த என்னென்ன வசதிகள் தேவை என்பது குறித்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரிகளிடமும் அங்கு சிகிச்சைக்கு வந்த பொதுமக்களிடமும் கருத்து கேட்டனர்.
மத்திய குழுவினர் ஆய்வு செய்ய வந்ததை தொடர்ந்து விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக வந்திருந்த உறவினர்களை அரசு ஆஸ்பத்திரி அதிகாரிகள் வெளியேற்றினர். இதனால் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியே காத்திருந்தனர். அவர்களிடம் கேட்ட போது மத்திய குழுவினர் எங்களை சந்தித்தால் தான் நாங்கள் ஆஸ்பத்திரியில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் பற்றி தெரிவிக்க முடியும் என்றும் ஆனால் அதிகாரிகள் மத்திய குழுவினர் எங்களை சந்திக்க விடாமல் வெளியேற்றி விட்டனர் என்றும் வேதனையோடு தெரிவித்தனர்.
விருதுநகர் முன்னேற துடிக்கும் மாவட்டமாக மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணங்களில் ஒன்று. இம்மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பது தான். பல்வேறு உயர் மட்ட மத்திய சுகாதாரத்துறை குழுக் கள் வந்த போதிலும் மாவட்டத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆஸ்பத்திரிகளை மேம்படுத்தவும் சுகாதார குழுவினர் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாத நிலையே நீடிக்கிறது. எனவே மத்திய சுகாதாரத்துறை குழுவினர் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளையும் ஆரம்ப சுகாதார நிலையங்களையும் மேம்படுத்த தேவையான நிதி ஒதுக்கீட்டை செய்வதற்கு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.