தி.மு.க. இளைஞர் அணிக்கு 30 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தி.மு.க. இளைஞர் அணிக்கு 30 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Update: 2019-10-20 23:00 GMT
ஓசூர்,

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கவிதை ஒப்புவித்தல், கட்டுரை போட்டிகள் தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் நடந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்ற போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவர்கள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். இறுதி போட்டிகள் கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதற்கு இளைஞரணி மாநில துணை செயலாளர்கள் மகே‌‌ஷ் அன்பில் பொய்யாமொழி, தாயகம் கவி, ஜோயல், ஆர்.டி.சேகர், அசன் முகமது ஜின்னா, துரை, பைந்தமிழ் பாரி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். போட்டியை கிரு‌‌ஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பிரகா‌‌ஷ் தொடங்கி வைத்தார். நடுவர்களாக, தஞ்சை கூத்தரசன், கோவி.செழியன், குழந்தை தமிழரசன், கந்திலி கரிகாலன், ஈரோடு இறைவன், வக்கீல் நன்மாறன், புதுக்கோட்டை விஜயா ஆகியோர் இருந்தனர். மாவட்ட அளவில் 234 மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட நிலையில், இறுதி போட்டியில் மாநில அளவில் 39 மாணவ,மாணவிகள் வெற்றி பெற்றனர்.

இதைத்தொடர்ந்து பரிசளிப்பு விழா நேற்று ஓசூரில் நடந்தது. விழாவில் தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இதில் தேனி மாவட்டத்தை சேர்ந்த மாணவர் பிரதீப் பாண்டியன் பேச்சு போட்டியில் முதலிடத்தையும், கட்டுரை போட்டியில் திருவாரூர் மாவட்டம் மாணவி ராஜேஸ்வரி, கவிதை ஒப்புவித்தல் போட்டியில் கோவை மாவட்டத்தை சேர்ந்த மாணவி தாரணி ஆகியோர் முதலிடத்தை பெற்றனர்.

இவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் பரிசு மற்றும் சான்றிதழும், போட்டிகளில் 2-ம் இடத்தை பிடித்தவர்களுக்கு தலா ரூ.15 ஆயிரம, சான்றிதழ் மற்றும் 3-வது இடத்தை பெற்றவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம், சான்றிதழ் மற்றும் ஆறுதல் பரிசு பெற்றவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரத்து 500 மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர் விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-

இளைஞர் அணி சார்பில் எத்தனையோ விழாக்கள், நிகழ்ச்சிகள் நடந்தாலும், என் மனதுக்கு மிகவும் பிடித்தது, நெருக்கமானது மற்றும் குடும்ப விழாவாக கருதுவது மாணவர்களுக்காக நடத்தப்படும் இந்த போட்டிகள்தான் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி கூறுவார்.

அந்த வகையில், இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வது கூடுதல் சிறப்பு, மேலும், நான் மாநில இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற பிறகு கலந்து கொள்ளும் முதல் விழா இதுதான் என்பதில் எனக்கு கூடுதல் பெருமை. உங்களை போன்ற மாணவர்களிடம் பேசுவதற்கு எனக்கு மிகவும் பதற்றமாக உள்ளது. ஏனெனில், நீங்கள் என்னை விட பயங்கரமாக பேசுகிறீர்கள்.

ஓசூர் தாலுகா அலுவலக சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளேன். இதில் என்ன சிறப்புயெனில், 50 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (20-10-1969) அந்த சிலை திறந்து வைக்கப்பட்டது. தற்செயலாக நடந்துள்ள இந்த நிகழ்வு மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தியாவின் முதன்முதலாக ஒரு இயக்கத்திற்கு, இளைஞரணி தொடங்கியது தி.மு.க. தான் என்ற வரலாறு உண்டு.

இன்றும் இளைஞரணி துடிப்போடும், உயிர்ப்புடனும் வைத்திருப்பது தி.மு.க. தான். சில மாதங்களுக்கு முன்பு நடந்த இளைஞரணி கூட்டத்தில், இளைஞர் அணிக்கு 30 லட்சம் உறுப்பினர்களை 2 மாதத்திற்குள் சேர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த பணியில் இளைஞர் அணியினர் தொடர்ந்து, கடுமையாக உழைத்து வருகின்றனர். இதில் பாதி பேர் ஏறக்குறைய இலக்கை தொட்டு விட்டார்கள். இந்த போட்டிகளில் மாவட்ட அளவில் தமிழகம் முழுவதும் ஏறக்குறைய 30 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களில் தேர்வு பெற்றவர்கள் 1,521 பேர். நிகழ்ச்சி நடந்த மாவட்டங்களில் பரிசு பெற்றவர்கள் 1,287 பேர். இங்கு இறுதி போட்டிக்கு வந்திருப்பவர்கள் 234 பேர். மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 39 பேர். அண்ணா பிறந்தநாளையொட்டி இன்றுடன் 17,667 மாணவ,மாணவிகளுக்கு ரூ. 3 கோடியே 95 லட்சத்து 70 ஆயிரம் தி.மு.க. இளைஞரணி அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டுள்ளது. இங்கு கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுமே வெற்றி பெற்றவர்கள் தான். முதல் இடம், 2-வது இடம், 3-வது இடம் என்பது வெறும் ஏட்டளவில்தான். இனி வரும் ஆண்டுகளில் நீங்கள் மேலும் வெற்றிகளை குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டுவன், முருகன், சத்யா மற்றும் கிரு‌‌ஷ்ணகிரி மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், மாநில விவசாய அணி துணைத்தலைவர் மதியழகன், முன்னாள் ஓசூர் எம்.எல்.ஏ. பி.வெங்கடசாமி, மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன், முன்னாள் ஓசூர் நகர்மன்ற தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன், கண்ணன், மன்சூர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆர்.பாபு, கட்சி பிரமுகர் ஆனந்தய்யா, நகர பொருளாளர் சென்னீரப்பா மற்றும் இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாணவ,மாணவிகளின் பெற்றோர், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பி.எஸ்.சீனிவாசன் வரவேற்று பேசினார். இதைத்தொடர்ந்து ஓசூர் தாலுகா அலுவலக சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து நடந்து சென்று உழவர் சந்தை அருகே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்து, கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர், உதயநிதி ஸ்டாலினுடன் ஆர்வத்துடன் ‘செல்பி’ எடுத்து கொண்டனர். முன்னதாக ஓசூருக்கு வந்த தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஏ.சத்யா வெள்ளிவாள் நினைவு பரிசாக வழங்கினார்.

மேலும் செய்திகள்