வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை: 1,300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - 4 பேர் கைது
கோவையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை,
கோவை செல்வபுரத்தை அடுத்த தெலுங்குபாளையம் வெற்றி விநாயகர் கோவில் வீதி பகுதியில் ஒரு வீட்டில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கிவைத்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவின்பேரில் துணை கமிஷனர் பாலாஜி சரவணன் அறிவுறுத்தலின்படி கோவை தெற்கு உதவி கமிஷனர் செட்ரிக் மேன்யுல் மேற்பார்வையில் செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏ.ரவி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சின்னதுரை, அசோகன், தலைமை காவலர் முத்துகண்ணன் மற்றும் போலீசார் அந்த வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அதில் வீட்டின் ஒரு அறையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 1,300 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக மூட்டைகளில் பதுக்கிவைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 1,300 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கிவைத்தது கோவை சுப்பையா வீதியை சேர்ந்த வாகாராம் (வயது 40) என்பதும், அங்கு தாமஸ் வீதியை சேர்ந்த பரத் பட்டேல் (23), தெலுங்குபாளையத்தை சேர்ந்த ஓம்பிரகாஷ் (24), ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அமரராம் (19) ஆகியோர் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அந்த வீட்டுக்கு போலீசார் சீல் வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.7 லட்சம் இருக்கும். புகையிலை பொருட்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்வதற்காக பதுக்கிவைத்து இருந்ததாக தெரிவித்தனா்.