அமைச்சர்கள் குறித்து அவதூறு: சீமான் மீது வழக்கு
அமைச்சர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக சீமான் மீது தூத்துக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையம் விசாரணை தூத்துக்குடி அரசு விருந்தினர் மாளிகையில் நடந்தது. இதில் கடந்த 16-ந் தேதி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராகி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளித்தார்.
பின்னர் அவர் விருந்தினர் மாளிகை முன்பு நிருபர்களுக்கு பேட்டி அளிதார். அப்போது, அலிபாபாவும் 40 திருடர்களும் படத்துடன் அமைச்சர்களை ஒப்பிட்டு அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அ.தி.மு.க பிரமுகரான தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் கலைஞர்நகரை சேர்ந்த சுயம்பு (வயது 58) என்பவர் தூத்துக்குடி தென்பாகம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், சீமான் அமைச்சர்களை திருடன் என்று விமர்சித்து உள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
அதன்பேரில் சீமான் மீது தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.