தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்
தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக பெரம்பலூர் மற்றும் அரியலூர் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
பெரம்பலூர்,
தீமையினை நன்மை வென்றதை நினைவுபடுத்தும் விதமாகவும், நமது கலாசாரத்தையும், மரபையும் வெளிப்படுத்தும் விதமாகவும், இந்தியா முழுவதும் பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான தீபாவளி பண்டிகை வருகிற 27-ந் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் புத்தாடைகளை வாங்குவதற்காகவும், இனிப்பு வகைகள், பட்டாசுகள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காகவும் நேற்று விடுமுறை தினம் என்பதால் பெரம்பலூர் கடைவீதி, போஸ்ட் ஆபீஸ் தெரு, சூப்பர் பஜார், பள்ளிவாசல் தெரு, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்த வண்ணம் இருந்தனர். இதனால் அந்தப்பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதியபடி இருந்தது.
பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முதல் பழைய பஸ் நிலையம் வரையிலான சாலையில் திடீரென பட்டாசு கடைகள், இனிப்பு கடைகள் ஆரம்பிக்கப்பட்டு விற்பனையை தொடங்கியுள்ளது. மேலும் ஜவுளிக்கடைகளிலும் புது ஆடை வாங்குவதற்காக கிராமங்களில் இருந்து மக்கள் படையெடுத்து வருவதால் கூட்டம் அலைமோதுகிறது. பெரம்பலூர் கடைவீதி, போஸ்ட் ஆபீஸ் தெரு உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக தரைக்கடைகளாக ஜவுளிக் கடைகள் ஏராளமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கு வியாபாரிகள் ஆடைகளை கூவி, கூவி... விற்பனை செய்கின்றனர். அவர்களிடம் பொதுமக்கள் பேரம் பேசி ஆடைகளை வாங்கி செல்கின்றனர். பொதுமக்களின் கூட்டத்தினால் சங்குப்பேட்டையில் இருந்து கடைவீதி வழியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனை வரை உள்ள சாலை போலீசாரால் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் அரியலூர் புதுமார்க்கெட் வீதி, எம்.பி கோவில் தெரு, சின்னகடை தெரு, பெரியகடை தெரு, காந்தி மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய கடைவீதிகளில் ஜவுளி எடுப்பதற்காகவும், தீபாவளிக்கு பொருட்கள் வாங்குவதற்காகவும் மக்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருந்தது. மக்களின் கூட்டத்தை பயன்படுத்தி பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட கடைவீதிகளில் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு போலீசார் ஆங்காங்கே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.