ரிசர்வ் வங்கி முன் பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் போராட்டத்தால் பரபரப்பு

மும்பையில் ரிசர்வ் வங்கி கட்டிடம் முன்பு பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் போராட்டத்தால் பரபரப்பு உண்டானது.

Update: 2019-10-19 23:53 GMT
மும்பை,

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா வங்கியின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி முடக்கி வைத்து உள்ளது. அந்த வங்கியில் நடந்த ரூ.4,355 கோடி முறைகேட்டை தொடர்ந்து அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கவும் ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்தது.

முதலில் 6 மாதத்திற்கு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதன் காரணமாக அந்த வங்கியில் கணக்கு வைத்து உள்ள ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தங்களது பணத்தை எடுக்க முடியாமல் கண்ணீருடன் பரிதவிக்கின்றனர். நியாயம் கோரி அவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரை சந்தித்து முறையிட்டனர். இதை தொடர்ந்து, ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும் உச்சவரம்பை ரூ,10 ஆயிரமாக உயர்த்தியது. பின்னர் ரூ.25 ஆயிரமாகவும், அண்மையில் ரூ.40 ஆயிரமாகவும் அதிகரிக்கப்பட்டது.

இருப்பினும் வங்கியில் லட்சம் மற்றும் கோடி கணக்கில் பணம் வைத்திருப்பவர்கள் செய்வதறியாது மனஉளைச்சல் அடைந்து உள்ளனர்.

இந்த நிலையில், நேற்று காலை 11.45 மணியளவில் பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் சுமார் நூறு பேர் திடீரென தென்மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி கட்டிடத்தின் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பி.எம்.சி. மற்றும் ரிசர்வ் வங்கிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு உண்டானது. அங்கு அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்து விடாமல் இருப்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்