பரமேஸ்வரின் வீடுகளில் வருமானவரி சோதனை, பழிவாங்கும் அரசியல்; பா.ஜனதா மீது கே.எச்.முனியப்பா குற்றச்சாட்டு

பரமேஸ்வரின் வீடுகளில் வருமானவரி சோதனை நடத்தியது, பழிவாங்கும் அரசியல் என்று பா.ஜனதா மீது கே.எச்.முனியப்பா குற்றம்சாட்டினார்.

Update: 2019-10-19 22:58 GMT
பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.எச்.முனியப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பழிவாங்கும் அரசியல் நீண்ட நாட்கள் நீடிக்காது. கோலாரை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் 7 பேரை இடைநீக்கம் செய்து மாநில காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்கள் கட்சி தலைவர்களுக்கு எதிராக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

சமீபத்தில் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து காங்கிரசுக்கு வந்த சிலர் தான் தலைமைக்கு எதிராக பேசினர். ஆனால் காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் கட்சி தலைமைக்கு எதிராக பேசவில்லை என்றும், அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவிடம் எடுத்துக் கூறினேன்.

தவறு செய்தவர்கள் அதை ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்தால், நடவடிக்கையை வாபஸ் பெறுவதாக தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மூத்த தலைவர்களை ஒருங்கிணைத்து செல்வார் என்பது பற்றி எனக்கு தெரியாது. இதுபற்றி அவரே முடிவு செய்வார்.

சித்தராமையாவுக்கு காங்கிரஸ் கட்சி முதல்-மந்திரி மற்றும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவிகளை வழங்கியுள்ளது. அதனால் அவர் கட்சி தலைவர்கள் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும். முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வரின் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தியது, பா.ஜனதாவின் பழிவாங்கும் அரசியல்.

இந்த பழிவாங்கும் அரசியல் நீண்ட நாட்கள் நீடிக்காது. அரசியலில் பரமேஸ்வர், டி.கே.சிவக்குமார் வளரக்கூடாது என்று பா.ஜனதா நினைக்கிறது. டி.கே.சிவக்குமாரை கைது செய்திருப்பது சட்டவிரோதமானது.

இவ்வாறு கே.எச்.முனியப்பா கூறினார்.

மேலும் செய்திகள்