பெங்களூருவில் 3 நாட்களாக நீடித்து வந்த விவசாயிகளின் தர்ணா போராட்டம் வாபஸ்
பெங்களூருவில் 3 நாட்களாக நீடித்து வந்த விவசாயிகள் தங்களின் தொடர் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். கவர்னரை சந்தித்து மனு கொடுக்க முடியாததால் பெண் விவசாயிகள் கண்ணீர்விட்டு அழுதனர்.;
பெங்களூரு,
மகதாயி நதிநீர் பிரச்சினை தொடர்பான வழக்கில் நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. அந்த தீர்ப்பை அரசிதழில் வெளியிட வலியுறுத்தி வட கர்நாடகத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் பெங்களூருவில் கடந்த 17-ந் தேதி பெங்களூருவில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
இதற்காக அவர்கள் ரெயில் மூலம் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் வந்து இறங்கினர். ஆனால் போலீசார் அவர்களை போராட்டம் நடத்த அனுமதிக்கவில்லை. சிட்டி ரெயில் நிலைய வளாகத்திலேயே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்கள் அதே இடத்தில் கடந்த 3 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இரவு நேரத்தில் பெய்த கனமழையையும் பொருட்படுத்தாமல் அவர்கள் அங்கு போராட்டம் நடத்தினர்.
கவர்னரை சந்தித்து மனு கொடுக்க அனுமதி வழங்குமாறு கவர்னர் மாளிகையில் உள்ள அதிகாரியிடம் விவசாயிகள் கேட்டனர். கவர்னரை சந்திக்க அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் நேற்று பெண் விவசாயிகள் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னரை சந்திக்க முயற்சி செய்தனர்.
அப்போது கவர்னரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து பெண் விவசாயிகள், அங்கிருந்த கவர்னர் மாளிகை அதிகாரியிடம் மனு கொடுத்துவிட்டு, அழுதபடியே வெளியே வந்தனர். கவர்னர் தங்களை சந்திக்க அனுமதி அளிக்காதது சரியல்ல என்று வேதனையுடன் குறிப்பிட்டனர்.
அதன் பிறகு விவசாயிகள், 3 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். அவர்கள் அனைவரும் ரெயில் மற்றும் பஸ் மூலம் தங்களின் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். முன்னதாக அவர்களை துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் மற்றும் முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து, தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.
போராட்டத்தை வாபஸ் பெற்ற பிறகு விவசாயிகள் சங்க தலைவர் வீரேஷ் சோப்ராத்மட் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாங்கள் இன்று (அதாவது நேற்று) எங்களின் தொடர் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளோம். துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் எங்களை சந்தித்து கேட்டுக் கொண்டதால் இந்த முடிவை எடுக்கவில்லை. இங்கு வாருங்கள் என்று அவரை நாங்கள் கூறவில்லை. எங்களை ஆதரிக்குமாறு எந்த அரசியல் கட்சியையும் நாங்கள் கேட்கவில்லை.
மகதாயி பிரச்சினையில் அரசியல் கட்சிகள், அரசியல் செய்கின்றன. இதற்காக அவர்கள் வெட்கப்பட வேண்டும். நாங்கள் கவர்னரை சந்திக்கவே இங்கு வந்தோம். காலக்கெடு எதையும் நாங்கள் விதிக்கவில்லை. கவர்னரை நாங்கள் மதிக்கிறோம். எங்களை நேரிடையாக சந்திக்காவிட்டாலும், அதிகாரி மூலம் எங்களின் மனுவை கவர்னருக்கு அளித்துள்ளோம். அதனால் நாங்கள் எங்கள் ஊருக்கு திரும்பி செல்கிறோம். எங்களின் கோரிக்கை மீது கவர்னர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம். ஒருவேளை உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்வோம்.
இவ்வாறு வீரேஷ் சோப்ராத்மட் கூறினார்.
துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் கூறும்போது, “மகதாயி நதிநீர் வழக்கின் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம். இந்த விஷயத்தில் ஒத்துழைப்பு வழங்குமாறு முதல்-மந்திரி எடியூரப்பா, மராட்டிய, கோவா மாநிலங்களை கேட்டுக் கொண்டுள்ளார். மராட்டியத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அடுத்த சில நாட்கள் காத்திருக்க வேண்டும். இந்த பிரச்சினைக்கு எங்கள் அரசு தீர்வு காணும்“ என்றார்.