வெம்பக்கோட்டையில் மயக்க மாத்திரை கொடுத்து மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது

பெட்டிக்கடை நடத்தி வந்த மூதாட்டிக்கு மயக்க மாத்திரை கொடுத்து நகையை பறித்துச்சென்றவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2019-10-19 23:15 GMT
தாயில்பட்டி,

வெம்பக்கோட்டையை சேர்ந்தவர் லட்சுமியம்மாள்(வயது60). இவர் அங்கு பெட்டிக்கடை வைத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இவர் கடையில் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்துள்ளார். அவர் தனது பெயர் நந்தகுமார் என்றும் சிவகாசியை சேர்ந்தவர் என்றும் கூறியுள்ளார். தாம் மருந்து பிரதிநிதியாக இருப்பதாக கூறியுள்ளார். அவரது பேச்சை லட்சுமியம்மாள் முழுமையாக நம்பினார்.

தொடர்ந்து தினமும் வந்து அவரை சந்தித்த நந்தகுமார், சில தினங்களுக்கு முன்பு உடலில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் சொல்லுங்கள் நான் மாத்திரை தருகிறேன் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய லட்சுமியம்மாள் அவரிடம் தனக்குள்ள உடல் உபாதையை தெரிவித்துள்ளார். உடனே தான் வைத்திருந்த ஒரு மாத்திரையை கொடுத்து அதை சாப்பிட நந்தகுமார் கூறியுள்ளார்.

மாத்திரையை சாப்பிட்ட சில நிமிடங்களில் லட்சுமியம்மாள் கடையிலேயே மயங்கி விழுந்து விட்டார். உடனே நந்தகுமார், அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க நகையை நைசாக கழற்றிக்கொண்டு அங்கிருந்து ஓடி விட்டார். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த லட்சுமியம்மாள் நகை திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் செய்தார்.

இந்த சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், காளிமுத்து தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை முழுமையாக ஆய்வு செய்தபோது அதில் நந்தகுமாரின் உருவம் பதிவாகி இருந்தது.

தொடர்ந்து விசாரணை நடத்தி ஈரோட்டில் பதுங்கி இருந்த நந்தகுமாரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து லட்சுமியம்மாளின் நகையை மீட்டனர். அவர் ஈரோட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவர் உண்மையிலேயே மருந்து விற்பனை பிரதிநிதிதானா? வேறு எங்கேனும் இதேபோல கைவரிசை காட்டியுள்ளாரா? என்று அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்